காஸா மருத்துவமனை சிங்கப்பூரர்களுக்கு நன்றி

காஸா மருத்துவமனை சிங்கப்பூரர்களுக்கு நன்றி

1 mins read
b488f48c-947e-404e-8653-aa5f53bc9e9c
காஸாவின் கமல் அத்வான் மருத்துவமனையில் சிங்கப்பூரர்கள் தந்த நன்கொடையால் சூரிய சக்தித் தகடுகளை பொருத்த முடிந்தது. - படம்: அனைத்துலக நிவாரண அமைப்பு/ஃபேஸ்புக்

முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் எஞ்சியிருந்த ஒரே ஒரு குழந்தைநல மருத்துவமனை அதன் மின்சாரத்தை இழந்ததை அடுத்து சிங்கப்பூரர்கள் அளித்த நன்கொடையால் அந்த வளாகத்தில் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்பட்டன.

குறித்த நேரத்தில் நல்கிய இந்த உதவிக்காக, காஸாவின் கமல் அத்வான் மருத்துவமனை இயக்குநர், தம் கைப்பட எழுதிய கடிதத்தில் சிங்கப்பூரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சிங்கப்பூரரான கில்பர்ட் கோ நிறுவிய ‘லவ் எய்ட் சிங்கப்பூர்’ நன்கொடை அமைப்பின் மூலம் இந்தத் தொகை திரட்டப்பட்டது.

காஸா எல்லைப்பகுதியில் உள்ள பல்வேறு திட்டங்களுக்காக நிதி திரட்ட, திரு கோ அனைத்துலக நிவாரண அமைப்புடன் இணைந்து செயலாற்றி வருகிறார்.

இரு அகதிகள் முகாம்களின் சமையலறைச் செயல்பாடுகள், ஆதரவற்ற சுமார் 400 பேருக்கு நிதி ஆதரவு போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.

நன்கொடையால் மின்சாரம் திரும்பக் கிடைத்ததன் மூலம் மருத்துவமனைச் சேவைகளை மீண்டும் வழக்கநிலைக்குக் கொண்டுவரவும் பாலஸ்தீனர்களுக்குச் சேவையாற்றவும் முடிந்தது என்று டாக்டர் ஹுசம் அபு சஃபியா தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் ஒரு திட்டமாக இந்த சூரிய சக்தித் தகடுகள் விளங்கும் என்று 62 வயது திரு கோ வருணித்திருந்தார்.

சிறு நாடானாலும் மனிதநேய உதவி என வரும்போது அதிகம் சாதிக்கும் வல்லமை சிங்கப்பூருக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்