தேடி மீட்கும் பணியில் சிங்கப்பூரின் ‘ரோபோ’ கரப்பான் பூச்சிகள்

தேடி மீட்கும் பணியில் சிங்கப்பூரின் ‘ரோபோ’ கரப்பான் பூச்சிகள்

1 mins read
5effb6ed-edf4-42b8-8cc6-bd0f60b9c0e7
உடலில் சிறிய சில்லு பொருத்தப்பட்ட கரப்பான் பூச்சிகள் மிகச் சிறிய இடங்களில் ஊடுருவிச் சென்று மீட்புப் பணிகளில் உதவக்கூடியவை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

அருவருப்புமிக்கவை என கரப்பான்பூச்சிகளைக் கண்டு பலரும் ஒதுங்கிப் போவதுண்டு.

ஆனால், சேன்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் ஊர்ந்துகொண்டிருந்த கரப்பான்பூச்சிகளைப் பார்க்க மக்கள் திரண்டனர்.

காட்சிக்கு வைக்கப்பட்ட ரோபோ கரப்பான்பூச்சிகள் ஒவ்வொன்றின் உடலிலும் ‘இன்ஃப்ராரெட்’ அதாவது அகச்சிவப்பு கேமரா ஒன்றும் ‘சென்சார்கள்’ என்ற உணரிகளும் பொருத்தப்பட்டிருந்தன.

இன்னமும் மேம்படுத்தப்பட்டு வரும் இந்த ‘ரோபோ’ கரப்பான் பூச்சிகள், தேடி மீட்கும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

அதிகபட்சம் ஆறு சென்டிமீட்டர் வரை வளரக்கூடிய ‘மடகாஸ்கார் ஹிசிங்’ கரப்பான்பூச்சிகள், மீட்புப் பணிகளின்போது மிகச் சிறிய இடங்களை ஊடுருவிச் செல்ல இயலும்.

சிறிய ரோபோக்களைக் காட்டிலும் இவை மேலும் செயல்திறனோடு இயங்குவதுடன் குறைந்தபட்ச மின்சக்தியைப் பயன்படுத்தக்கூடியவை.

இடிபாடுகளில் இந்த ‘ரோபோ’க்கள் விடுவிக்கப்படும்போது, அகச்சிவப்பு கேமராக்கள் மூலம் மனித உயிர்களை அவை கண்டறியும்.

இதனால், நிலநடுக்கம் போன்ற நெருக்கடி காலங்களில் முன்கள உதவி வழங்கும் அதிகாரிகளுக்கு இவை முக்கியத் தகவல்களை அளிக்கும்.

‘ரோபோ’க்களின் ஆற்றலை ஏப்ரல் 3 முதல் 5 வரை நடைபெற்றுவரும் ‘மிலிபோல் ஆசிய-பசிபிக் அன்ட் டெக்எக்ஸ்’ மாநாட்டில் காணலாம்.

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக உருவாக்கப்பட்ட அதிநவீனப் புத்தாக்கப் படைப்புகள் இந்த வர்த்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

உலகின் 10,000க்கும் மேற்பட்டோர் இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம், பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் ஆகியோர் இந்த நிகழ்வின் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்