கப்பல் கொள்கலன் ஒன்றை ஏற்றிச் செல்லும்போது சரியாகப் பார்க்கமுடிகிறதா என்பதை உறுதிசெய்யாததால் பளுதூக்கி, தரத்தைச் சோதனையிடும் பணியாளர் (குவாலிட்டி கன்ட்ரோல் சர்வேயர்) மீது ஏறி அவர் இறக்க நேர்ந்தது.
அச்சம்பவம் 2021ஆம் அண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி நிகழ்ந்தது. அதற்குக் காரணமான ஆறுமுகம் கணேசன் எனும் பளுதூக்கி ஓட்டுநருக்கு வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 4) 138 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 45 வயது மலேசியரான ஆறுமுகம் ஒப்புக்கொண்டார். அவர் பளுதூக்கியில் ஏற்றிவந்த கொள்கலனின் நீளம் 6.06 மீட்டர், 2.44 மீட்டர் அகலம், 2.59 மீட்டர் உயரம் கொண்டது என்றும் அதை 49 வயது டியோ செர் கியோங் எனும் ஆடவர் மீது அவர் இறக்கியதாகவும் முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்தபோது ஆறுமுகமும் திரு டியோவும் ஏலைட் கன்டெய்னர் (எஞ்சினியர்ஸ் & மேனியுஃபேக்ச்ரஸ்) எனும் நிறுனத்தில் வேலை செய்தனர் என்று மனிதவள அமைச்சின் அரசு தரப்பு வழக்கறிஞர் டெல்விந்தர் சிங் கூறினார்.
“பளுதூக்கியை இயக்கியபோது அப்பாதையில் யாரும் எதுவும் இல்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் ஊகித்துக்கொண்டார். அவர் பார்வை மறைக்கப்பட்டிருந்தது, அதனால் மரணம் ஏற்பட்டது,” என்றார் திரு சிங்.
2021 அக்டோபர் ஒன்றாம் தேதியன்று காலை ஒன்பது மணியளவில் சம்பவம் குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் கிடைத்தது. பல காயங்களுக்கு ஆளான திரு டியோ, சம்பவ இடத்திலேயே மாண்டது உறுதிப்படுத்தப்பட்டது.

