தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சிகரெட்டை விளம்பரப்படுத்தும் செயலில் ஈடுபட்ட சிங்கப்பூர் நிறுவனம்

2 mins read
cd6381c8-615c-4b65-9539-04e8e4b0bee3
‘வேப்பிங்’ நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு பெண். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகம் முழுவதும் உள்ள இணையப் பிரபலங்களைக் கொண்ட சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தான் தயாரிக்கும் மின்சிகரெட்டுகளையும் ‘வேப்பிங்’ பொருள்களையும் விளம்பரப்படுத்தி வந்துள்ளது.

சிங்கப்பூரில் இயங்கும் அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் அத்தகைய விளம்பர நடவடிக்கைகளை வழிநடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நடவடிக்கைகளில் மூன்றாம் தரப்பினர் இணையப் பிரபலங்களை வேலைக்கு எடுப்பர். சம்பந்தப்பட்ட நிறுவனம், அதன் விநியோகிப்பாளர்கள் ஆகிய இரு தரப்பும் இணையப் பிரபலங்களுடன் நேரடித் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பதற்கான ஏற்பாடு இது.

பிறகு மின்சிகரெட்டுகள், ‘வேப்பிங்’ பொருள்கள் சம்பந்தப்பட்ட காணொளிகளைத் தயாரிக்கும் முறை குறித்த விவரங்கள் இணையப் பிரபலங்களுக்கு வழங்கப்படும். இன்ஸ்டகிராம், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களின்வழி இளையர்களைக் குறிவைப்பது இந்நடவடிக்கையின் இலக்காகும்.

சம்பந்தப்பட்ட மின்சிகரெட் நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களுக்குள் அனுப்பிக்கொண்ட தகவல்களைப் பற்றியும் அதன் மின்சிகரெட் பயன்பாட்டு முறையை விளக்கும் காணொளியைப் பற்றியும் சிலர் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இந்த விவகாரத்தை அறிந்தது.

அக்காணொளியில் சம்பந்தப்பட்ட மின்சிகரெட் நிறுவனத்தின் விளம்பர மேலாளர், சிங்கப்பூரில் இயங்கும் நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் உட்பட வெளிநாட்டு ஊழியர்களுக்குக் குறிப்பிட்ட தகவல்களை அளித்தார்.

சீனாவில் வாழும் அமெரிக்கரான அந்த விளம்பர மேலாளர், மின்சிகரெட் தொடர்பான பதிவுகளை எப்படி டிக்டாக்கில் பதிவேற்றம் செய்வது என்பதைக் காணொளியில் விளக்கினார். அத்தகைய பதிவுகளும் அவை இடம்பெறும் கணக்குகளும் முடக்கப்படாமல் இருப்பதற்கான வழிமுறைகளை அவர் விவரித்தார்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட இளையர்களை குறிவைத்து சீன மின்சிகரெட் நிறுவனம் மின்சிகரெட்டுகளையும் ‘வேப்பிங்’ பொருள்களையும் விளம்பரப்படுத்துவதாக அதன் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற தகவல்களை வெளியிட்ட சிலர், முதலில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சைத் தொடர்புகொண்டனர்.

ரிவர் வேலியில் இருக்கும் தங்களின் அலுவலகத்தின் வாயிலாக சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் மின்சிகரெட்டுகளையும் ‘வேப்பிங்’ பொருள்களையும் விளம்பரப்படுத்தி விநியோகித்தது தெரியவந்தது. முன்னதாக சிங்கப்பூரில் இயங்கிய சீன மின்சிகரெட் நிறுவனத்தின் மேலாளர்கள் சட்டவிரோத செயல்கள் குறித்த விவரங்களைப் பற்றிக் கலந்துபேசியதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ரகசியமாகப் பதிவுசெய்தது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் அறிக்கை இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. அதற்குப் பிறகு ரிவர் வேலி அலுவலகம் மூடப்பட்டது.

சம்பந்தப்பட்ட நிறுவனம், சீனாவில் மின்சிகரெட்டுகளையும் ‘வேப்பிங்’ பொருள்களையும் தயாரிக்கும் ஆகப் பெரிய நிறுவனங்களில் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது, 2020ஆம் ஆண்டு மட்டும் 2.2 பில்லியன் யுவன் (419 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான ‘வேப்பிங்’ பொருள்களை விற்றது.

குறிப்புச் சொற்கள்