தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைவான் நிலநடுக்கம்: காணாமற்போன சிங்கப்பூரர்கள் இடம்பெற்ற காணொளி மீட்பு

2 mins read
b87e05d7-d1bf-4492-a355-d549e7a2ffa1
பேருந்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியில் இடம்பெற்றுள்ள காட்சி. - படம்: காணொளிக் காட்சி

தைவானை உலுக்கிய 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் காணாமற்போன சிங்கப்பூர் தம்பதி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கடைசியாக அவ்விருவரும் ஹுவாலியென் நகரில் உள்ள டரோக்கோ கோர்ஜ் பகுதியின் ‌ஷக்காடாங் பாதையில் ஒரு பேருந்திலிருந்து இறங்கியது அதன் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தெளிவாகத் தெரியாத அந்த 14 விநாடிக் காணொளியில் திரு சிம் ஹுவீ கொக், திருவாட்டி நியோ சியூ சூ ஆகியோர் கடந்த புதன்கிழமையன்று (ஏப்ரல் 3) காலை 7.20 மணிக்கு டரோக்கோ கோர்ஜ் பகுதியைச் சற்றிக் காண்பிக்கும் பேருந்திலிருந்து இறங்கியது தெரிந்தது.

அதற்கு சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு நிலநடுக்கம் உலுக்கியது. அது, தைவான் 25 ஆண்டகளில் எதிர்கொண்டுள்ள ஆக மோசமான நிலநடுக்கமாகும்.

ஹுவாலியென் நகரம், நிலநடுக்கத்தால் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அந்நகருக்குக் கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டுதான் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பேருந்திலிருந்து இறங்கியதற்கும் நிலநடுக்கம் உலுக்கியதற்கும் இடைப்பட்ட நேரத்தில் திரு சிம், திருவாட்டி நியோ இருவரும் எந்தெந்த பகுதிகளுக்கு நடந்து சென்றிருக்கக்கூடும் என்பதை அறியும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.தைவானின் நிலநடுக்க நிவாரண ஆணையம் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 7) வெளியிட்ட அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட பகுதியில் உயிர் தப்பியோரைத் தேடும் பணிகளில் வானூர்திகளைக் கொண்ட துருக்கிய நாட்டுக் குழுவினரும் அடங்குவர்.

காணாமற்போன சிங்கப்பூர் தம்பதி ஆஸ்திரேலியக் கடவுச்சீட்டுகளையும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை காலை 6.30 மணியளவில் அவர்கள் பேருந்தில் ஏறியதாகவும் இறுதி நிறுத்தம் வருவதற்கு முன்பு அவர்கள் இறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததால் முன்னதாக சம்பந்தப்பட்ட பேருந்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளிகளை அதிகாரிகளால் மீட்க முடியவில்லை.

சிங்கப்பூரில் இருநாட்டுக் குடியுரிமை வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது. காணாமற்போன தம்பதியிடம் இருநாட்டுக் கடவுச்சீட்டுகள் இருந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்