ஜெர்மனியில் கம்பத்து உணர்வுடன் இணைந்த சிங்கப்பூர்த் தமிழர்கள்

அதிரடியான மாற்றங்களுக்கு உள்ளாகும் உலகச் சூழலில் சிங்கப்பூர், ஜெர்மனியுடனான தனது நீடித்த உறவைப் பெரிதும் மதிப்பதாக சிங்கப்பூரின் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

“நாடுகள் ஒன்றுகூடி பங்காளித்துவங்களை அமைத்து உலகளவிலான முடிவுகளை வடிவமைப்பது முக்கியம்,” என்று திரு வோங் கூறினார்.

ஜெர்மனியின் ஹோட்டல் அல்டன் கெம்பின்ஸ்கியில் ஏறக்குறைய 300 சிங்கப்பூரர்களைச்ச் சந்தித்தபோது ஆற்றிய உரையில் திரு வோங் இவ்வாறு சொன்னார்.

ஏப்ரல் 9ஆம் தேதியன்று பெர்லினில் ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிங்கப்பூரர்களைத் திரள வைத்தது அவர்களது ‘கம்பத்து உணர்வு’ என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பைப் பற்றிச் சில நாள்களுக்கு முன்னதாகத் தெரிய வந்தது என்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் த. ரெங்கநாயகி, 55, சந்திப்பு நடந்த நாளன்றுதான் நிகழ்ச்சிக்குப் பதிவு செய்தார்.

சிங்கப்பூரர்கள் சிலருடன் பல்கலைக்கழக விரிவுரையாளர் த. ரெங்கநாயகி, 55 (வலது).  படம்: த. ரெங்கநாயகி

“கடந்த நான்கு மாதங்களாக ஜெர்மனியில் தங்கியிருக்கும் நான், சில காலமாக சிங்கப்பூரர்களைச் சந்திக்கவில்லை. எனவே நான் ஆவலுடன் அந்த மாலை நேர நிகழ்ச்சிக்கு விரைந்தேன்,” என்று அவர் தமிழ் முரசிடம் தொலைபேசி வழியாகக் கூறினார்.

துணைப் பிரதமர் வோங் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் மட்டும் இருந்ததால் அவரை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பைப் பெறவில்லை என்றார் சமூகப்பணித்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள திருவாட்டி ரெங்கநாயகி.

இருந்தபோதும், துணைப் பிரதமர் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை பயனுள்ளதாக இருந்ததாகக் கூறிய அவர், சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்வி முறை, ஜெர்மனியின் கல்விமுறையை ஒட்டி வடிவமைக்கப்பட்டதாகத் திரு வோங் கூறியது சுவையாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் இருந்தாலும் அங்கு கூடியிருந்த சிங்கப்பூரர்கள் அனைவரும் சிங்கப்பூர் என்ற குடும்பத்தின் முக்கியமான, மதிப்புமிக்க மனிதர்களாக இருப்பதாகத் திரு வோங் கூறியது தமக்கு இதமளித்ததாகச் சொன்னார்.

சிங்கப்பூர் உணவுண்டு, தெரியாத சிங்கப்பூரர்களின் அறிமுகத்தைப் பெற்ற அனுபவம் திருவாட்டி ரெங்கநாயகிக்கு இன்பமாய் இருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மற்றொருவரான வர்த்தகர் மகேந்திரன் ரெட்டி, ஜெர்மானிய மனைவியுடனும் இரண்டு மகள்களுடனும் வசிக்கும் ஹெம்பர்க் நகரிலிருந்து இரண்டு மணி நேர ரயில் பயணம் மூலம் பெர்லினை அடைந்தார்.

திரு வோங் தம் உரையில் குறிப்பிட்ட சிங்கப்பூர்க் கம்பத்து உணர்வு உண்மைதான் என நிகழ்ச்சி இடத்தில் உணர்ந்ததாக ஐம்பது வயது மதிக்கத்தக்க திரு மகேந்திரன் கூறினார்.

“சிறார் முதல் முதியோர் வரை எல்லா வயதுப் பிரிவினரும் அங்கு இருந்தனர். ஒற்றுமையாக இருந்து, நாங்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகிக் கொண்டோம். இதுவே நான் ஜெர்மனியில் பெற்ற கம்பத்து உணர்வு,” என்றார்.

திரு வோங்குடனும் வேறு இரண்டு சிங்கப்பூரர்களுடனும் திரு மகேந்திரன்.  படம்: மகேந்திரன் ரெட்டி

“ஜெர்மனியில் சிங்கப்பூரின் கொடியை உயரப் பறக்கவிடும் தூதர்களில் ஒருவரான என்னைக் கண்டதில் நம் துணைப் பிரதமர் மனநிறைவை வெளிப்படுத்தினார்; மேலும் தொடரும்படி ஊக்கமளித்தார்,” என்றார் திரு மகேந்திரன்.

ஜெர்மனியில் திரு வோங்கிற்கு அளிக்கப்பட்ட பெருமதிப்பு, உலகில் சிங்கப்பூருக்கு இருக்கும் மாட்சிமையை எடுத்துக்காட்டுவதாக ஈராண்டுகளுக்குமுன் ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்த திரு மகேந்திரன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!