தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோத ஆளில்லா வானூர்தி பயன்பாடு: 2023ல் 309 சம்பவங்கள்

3 mins read
2e1ad8f6-c74e-4984-91e9-60163d584b65
சட்டத்தை மீறிய 15 சம்பவங்களில் $4,000 முதல் $45,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2023ஆம் ஆண்டில் ஆளில்லா வானூர்திகளைச் (ட்ரோன்) சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் தொடர்பில் எட்டு பேர் மீதும் ஏழு நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டு, $4,000 முதல் $45,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த ஆண்டில் மொத்தம் 309 சம்பவங்கள் நடந்தன. மற்ற 294 ஆளில்லா வானூர்திகளை இயக்கியவர்களுக்கு அபராதம், கடுமையான எச்சரிக்கை அல்லது ஆலோசனை வழங்கப்பட்டது.

2023 பிப்ரவரியில், பதிவு செய்யப்படாத ஆளில்லா வானூர்தியைப் பொழுதுபோக்குக்காகவோ கல்விக்காகவோ அன்றி, தேவையான உரிமமும் இன்றி, பொறுப்பற்ற முறையில் பறக்கவிட்டதற்காக 25 வயது ஆடவருக்கு $23,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தேவைப்படும் உரிமம் இல்லாமல் வர்த்தக நோக்கத்தில் ஆளில்லா வானூர்தியை இயக்கிய எட்டு குற்றச்சாட்டுகளின் பேரில் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு 2023ஆம் ஆண்டு மே மாதம் $45,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 51 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

கடந்த 2020ஆம் ஆண்டில், 20 ஆளில்லா வானூர்தி பயன்பாட்டாளர்கள் மூன்று மாத இடைவெளியில் சாங்கி விமான நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் தங்கள் ஆளில்லா வானூர்திகளைச் சட்டவிரோதமாக பறக்கவிட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.

2022ல் அனுமதியின்றி ஆளில்லா வானூர்தியைப் பொதுப் பகுதிகளில் பறக்கவிட்டதற்காக கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு $22,000 அபராதம் விதிக்கப்பட்டது. சட்டவிரோத ஆளில்லா வானூர்திகளால் விமானப் போக்குவரத்துக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து எச்சரித்த சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎஸ்), சட்டவிரோத ஆளில்லா வானூர்தி செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தவுள்ளதாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) சிஏஏஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அதிக ஆபத்தான சாங்கி விமான நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள பகுதிகளில்.

சாங்கி விமான நிலையப் பகுதியில் கண்காணிப்பை அதிகரித்திருப்பதுடன், ‘விமானங்கள் பறக்கவிடப்படக்கூடாது’ எனக் கூறும் அறிவிப்புகளையும் சிஏஏஎஸ் அமைத்துள்ளது.

பாசிர் ரிஸ், பொங்கோல், தெம்பனிஸ், ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரங்களில் உள்ள வீவக குடியிருப்புகள் உட்பட விமான நிலையத்துக்கு அருகே வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கான விழிப்புணர்வு இயக்கத்தை மக்கள் கழகத்துடன் இணைந்து சிஏஏஎஸ் முன்னெடுக்கிறது.

அப்பகுதியின், கூட்டுரிமை வீடுகள் நிர்வாகக் கழகத்துடனும் இணைந்து செயல்படும்.

மின்தூக்கித் தளங்களில் பதாகைகள், மின்னிலக்கப் பதாகைகள், சுவரொட்டிகள் போன்றவை இடம்பெறும்.

“ஆளில்லா வானூர்திகள் கடந்த ஆண்டுகளில் பிரபலமடைந்துள்ளன. விமானப் போக்குவரத்திலும் பொதுப் பாதுகாப்பிலும் பாதிப்பு இருப்பதை உறுதிசெய்ய நாம் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம், “என்று சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் ஆளில்லா விமான அமைப்பு சார்ந்த கொள்கை, விதிமுறைகள், செயல்பாடுகள் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரி திரு மாறன் பரமநாதன் கூறினார்.

விமான நிலையச் சுற்று வட்டாரம், அபாயகரமான பகுதிகள், தடைசெய்யப்பட்ட பகுதிகள், கட்டுப்பாடு உள்ள பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு 5 கிலோ மீட்டருக்குள் ஆளில்லா வானூர்தி இயக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆகாயப் போக்குவரத்துச் சட்டம் 1996ன் கீழ், $50,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மேல் விவரங்களுக்கு https://www.caas.gov.sg/public-passengers/unmanned-aircraft என்ற இணையத் தளத்தைப் பார்க்கவும்.

குறிப்புச் சொற்கள்