தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய தலைவர்கள் பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும்: பிரதமர் லீ அறிவுறுத்து

7 mins read
89b016ac-c7cc-40b7-9e76-f9a8624a2a12
2024 பிப்ரவரி 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் லீ. - படம்: தொடர்பு தகவல் அமைச்சு

லாரன்ஸ் வோங்கும் அவரது நான்காவது தலைமுறைக் குழுவும் தலைமை ஏற்கும்போது, சில நாடுகள் அவர்களின் மீள்திறனைச் சோதித்துப் பார்க்க முயலலாம். அப்போது, சிங்கப்பூர் பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.

புதிய தலைவர்களையும் அவர்களின் கொள்கைகளையும் மக்கள் அளவிட விரும்புவார்கள். புதிய பிரதமரின் உள்நாட்டு நிலைப்பாடு, ஆதரவு, மக்களுடனான ஈடுபாடு அவரது தாக்குப்பிடிக்கும் திறனையும் மக்கள் அறிந்துகொள்ள விரும்புவார்கள் என்றார் அவர்.

தலைமைத்துவ மாற்றத்திற்கிடையே, சிங்கப்பூர் சோதிக்கப்படுமா என்ற கேள்விக்கு திரு லீ அவ்வாறு கூறினார்.

துணைப் பிரதமர் திரு வோங் புதியவர் அல்லர். பங்காளிகளுடன் உறவுகளை வளர்ப்பதற்கான சந்திப்புகளை அவர் மேற்கொண்டு வருகிறார் என்ற பிரதமர் லீ, அவரது அண்மைய ஜெர்மனி, பிரான்ஸ் பயணங்களைக் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு, அவர் அமெரிக்கா பயணம் மேற்கொண்டு, பல்வேறு ஆசியான் தலைவர்களைச் சந்தித்ததையும் சுட்டினார்.

வெளியுறவுக் கொள்கை பற்றிப் பேசிய திரு லீ, “சிங்கப்பூரின் அரசதந்திரம் உலகில் ஓர் இடத்தைப் பிடிக்க உதவியுள்ளது,” என்றார்.

“மக்கள் சிங்கப்பூரை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். சிங்கப்பூர் மீது ஒரு குறிப்பிட்ட மரியாதை உள்ளது, அது நல்லது,” என்றார் அவர்.

ஆனால் புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து, தடையற்ற வர்த்தகம் மீதான நம்பிக்கை ஆட்டம் கண்டுள்ள நிலையில், புறச்சூழல் மேலும் குழப்பமடைந்துள்ளது.

இதற்கு மத்தியில், சிங்கப்பூர் உலகத்துடன் மேலும் அதிகமாக இணைந்துள்ளது. டிக்டாக் காணொளிகள் முதல் இணைய ‘மீம்ஸ்’, ‘வாட்ஸ்அப்’ செய்திகள், பயணங்கள் என்று சிங்கப்பூரர்கள் இப்போது வெளிப்புறச் செல்வாக்கிற்கு அதிகம் ஆளாகிறார்கள் என்று பிரதமர் லீ சுட்டினார்.

இதன் விளைவாக, வெளியுறவுக் கொள்கையும் உள்நாட்டுக் கொள்கையும் அதிகமாக பின்னிப்பிணைந்துள்ளன. சிங்கப்பூர் தன்னை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

தாம் துணைப் பிரதமராக இருந்தபோது, பொறுப்பேற்பதற்கு முன்னதாக 2004ஆம் ஆண்டில் தைவானுக்குத் தனிப்பட்ட மற்றும் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டதை நினைவுகூர்ந்தார்.

“அது ஒரு வதந்தியைக் கிளப்பியது. நான் என் நிலையை விளக்க வேண்டியிருந்தது. எனவே, எனது முதல் தேசிய தினப் பேரணி உரையில், வெளியுறவுக் கொள்கை பற்றி மட்டுமின்றி, தைவான் பயணம் பற்றியும் பேச வேண்டியிருந்தது. நான் ஏன் சென்றேன், அது ஏன் சிங்கப்பூருக்கு முக்கியம், அந்த நேரத்தில் அது சலசலப்பை ஏற்படுத்தினாலும், தேசிய நலனுக்கான ஏன் அப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதைப் பற்றி விளக்க வேண்டியிருந்தது,” என்றார் அவர்.

கடந்த 20 ஆண்டுகளில், சிங்கப்பூர் சோதனைக்குள்ளான மற்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. அரசாங்கம் பிரச்சினைகளை மக்களிடம் விளக்கி அவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டியிருந்தது என்று திரு லீ கூறினார்.

சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் நாட்டின் நீண்ட கால நலன்களை அடிப்படையாகக் கொண்டுள்ளபோதிலும், அதனைச் சமப்படுத்த வேறுபட்ட தேசிய நலன்களும் இருக்கலாம்.

“ஒரு குறிப்பிட்ட பிரச்சினை வருகிறது. ஒருவர் கடல் எல்லையில் கொஞ்சம் அத்துமீறுகிறார். மறுபுறம், அவர் பசுமை எரிசக்தி வணிகம் செய்ய முன்வருகிறார். உங்களுக்கு கோபம் வருகிறதா? முன்னதைக் கவனிக்காமல் விட்டுவிட்டு, வணிகம் செய்வதா? ஒன்றாகக் கையாள்வதா? இதற்கு முறைப்படுத்தப்பட்ட பதில் இல்லை,” என்றார் பிரதமர் லீ.

“ஒவ்வொன்றையும், ஒவ்வொரு சூழ்நிலையையும் பார்க்க வேண்டும், பின்னர் முடிவெடுக்க வேண்டும்.

“ஒரு பெரிய விஷயத்தில், ஒரு பெரிய முடிவை எடுத்து ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றால், மக்கள் கருத்தையும் அரசாங்கம் கவனத்தில்கொள்ள வேண்டும். அரசாங்கம் தன் பார்வையை மக்களுடன் பேசும். அது பற்றி விவாதிக்கும்.

“இதில் காலப்போக்கில் மாறாமல் இருப்பது, சிங்கப்பூர் இன்னமும் ஒரு சிறு சிவப்புப் புள்ளி என்பதுதான்.

“சிங்கப்பூர் இன்னமும் அனைத்துலகச் சட்டம், வணிக விதிகளைச் சார்ந்துள்ளது. அனைவரும் ஒருவருடன் ஒருவர் முட்டிமோதும் சூழலில் சிங்கப்பூர் அதன் சொந்தநலன்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது,” என்று திரு லீ கூறினார்.

விவாதங்களில் சிங்கப்பூர் ஓங்கி ஒலிக்கும் நிலையில் இல்லை என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். சிங்கப்பூர் சுயமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு அதிகம் செய்ய வேண்டும், அதுதான் வெளியுறவு அமைச்சைப் பரபரப்பாக வைத்துள்ளது.

எல்லாருக்கும் இன்னும் தேவைப்படுவதாக, தொடர்புடையதாகத் திகழ சிங்கப்பூர் தொடர்ந்து நண்பர்களை உருவாக்க வேண்டும். பொதுவான விருப்பங்களைக்கொண்ட பிற நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்த வேண்டும், என்று அவர் மேலும் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடுகளில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தீவிர பங்காற்றியதை திரு லீ சுட்டினார்.

மாநாட்டின் முக்கிய விவகாரமான கார்பன் சந்தைகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது. ஒரு நேர்மையான மத்தியஸ்தராக வெவ்வேறு கண்ணோட்டங்களை ஒன்றிணைக்க உதவி, இறுதியில் ஓர் உடன்பாட்டுக்கு வழிகோலினார் என்று அவர் குறிப்பிட்டார்.

பிரச்சினைகளைப் பற்றிய ஆழமான அறிவுடன் அவற்றைப் புரிந்து, வெவ்வேறு யோசனைகளை ஒன்று சேர்த்து, பாலம் அமைத்து, ஒரு தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். அதைச் செய்வதில் சிங்கப்பூர் மகிழ்ச்சி அடைகிறது. அதில் சிங்கப்பூருக்கு நல்ல பெயரும் உள்ளது என்று பிரதமர் கூறினார்.

பிரதமர் லீ சியன் லூங், துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் ஆகியோர் இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ, தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோரை 2024 ஏப்ரல் 29ஆம் தேதி இந்தோனீசியாவில் சந்தித்தனர். திரு லாரன்ஸ் வோங் மே 15ஆம் தேதி அன்று பிரதமர் லீயிடமிருந்து பிரதமர் பொறுப்பை ஏற்க உள்ளார். பிப்ரவரியில் நடந்த தேர்தலில் வென்ற இந்தோனீசிய தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாண்டோ, அக்டோபரில் அதிபராகப் பதவியேற்பார்.
பிரதமர் லீ சியன் லூங், துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் ஆகியோர் இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ, தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோரை 2024 ஏப்ரல் 29ஆம் தேதி இந்தோனீசியாவில் சந்தித்தனர். திரு லாரன்ஸ் வோங் மே 15ஆம் தேதி அன்று பிரதமர் லீயிடமிருந்து பிரதமர் பொறுப்பை ஏற்க உள்ளார். பிப்ரவரியில் நடந்த தேர்தலில் வென்ற இந்தோனீசிய தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாண்டோ, அக்டோபரில் அதிபராகப் பதவியேற்பார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் அண்டை நாடுகளுடனான உறவுகள் பற்றிப் பேசிய, பிரதமர் லீ, இரு நாடுகளுடனான உறவுகள் நல்லநிலையில் இருப்பதாகக் கூறினார்.

“இரண்டுமே எப்போதும் சிக்கலான உறவுகளாக இருக்கும் என்று நினைக்கிறேன். அருகிலுள்ள அண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எனினும், வெவ்வேறு கண்ணோட்டங்கள் அல்லது உரசல்கள் ஏற்படக்கூடிய பல சந்தர்ப்பங்கள் எப்போதும் இருக்கும். இரு தரப்புக்கும் அது தெரியும் என்று நினைக்கிறேன். மோதல்கள் ஏற்படாமல் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். ஏனெனில் ஒன்றிணைந்து பல விஷயங்களைச் செய்ய முடியும்,” என்றார் அவர்.

மலேசியாவுடன் பெட்ரா பிராங்கா, மலாயன் ரயில்வே நில ஒப்பந்தம் போன்ற விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் (இடது) 2023 அக்டோர் 30ஆம் தேதி இஸ்தானாவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது.
பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் (இடது) 2023 அக்டோர் 30ஆம் தேதி இஸ்தானாவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் மற்ற விவகாரங்கள் குறித்து பேசியதாகவும், அவை ஒத்துழைக்கக்கூடியவை ஆனால் வான்வெளி, கடல் எல்லைகள், தண்ணீர் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் என்றும் அவர் கூறினார்.

“இவையெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை. இன்னும், முடிவான தீர்வுகளை எட்டவில்லை. அடுத்து வருபவர் ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளன,” என்று பிரதமர் லீ கூறினார்.

இந்தோனீசியாவுடன், சிங்கப்பூர் வான்வெளி மேலாண்மை, தற்காப்பு ஒத்துழைப்பு, குற்றவாளிகளை நாடு கடத்துதல் ஆகியவற்றில் மூன்று முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தங்கள் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வந்தன, இவை இருதரப்பு உறவுகளின் மிகப்பெரிய மைல்கற்களில் ஒன்றாகும்.

இது இரு தரப்பினரையும் “ஒரு நல்ல, நீண்ட கால அடிப்படையில், இரு நாடுகளும் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வைத்துள்ளது,” என்று பிரதமர் லீ கூறினார்.

அமெரிக்கா, சீனா பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் லீ, அவர்களின் தேசிய நிலைப்பாடுகளுக்கும் தேசிய நலன்களுக்கும் இடையிலான, அடியிலிருக்கும் பதட்டங்களும் முரண்பாடுகளும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு, ஒருவேளை 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடும் என்றார்.

அதிர்ஷ்டவசமாக, சிங்கப்பூர் இருநாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

“ஒட்டுமொத்தமாக சீனாவுடானான உறவு மிகவும் நட்பானது. அவர்களுடன் மேலும் பலவற்றைச் செய்ய விரும்புகிறோம் என்பதும் சிங்கப்பூர் அவர்களுக்கு எதிரானதல்ல என்பதும் அவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்,” என்றார் திரு லீ.

அதேவேளையில், சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும் நாம் அவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதை சீனா அறியும் என்று கூறிய பிரதமர் லீ, தேசிய நலன்களின் அடிப்படையிலேயே முறையான உறவைக் கட்டிக்காப்பது முக்கியம், இன அடையாளத்தின் அடிப்படையின் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுடன், சிங்கப்பூர் முதலீட்டுத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. இரு தரப்பும் தற்காப்பு ஒத்துழைப்புகளையும் கொண்டுள்ளன.

எப்போதும் 1,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் அமெரிக்காவில் உள்ளனர், அங்கு மிகப்பெரிய வெளிநாட்டு ராணுவப் படைகளில் ஒன்று அது என்று பிரதமர் லீ கூறினார்.

அடிப்படையில், வட்டாரப் பாதுகாப்பிலும் வளப்பத்திலும் அமெரிக்காவிற்கு முக்கியமான, ஆக்கபூர்வமான பங்கு இருப்பதாக சிங்கப்பூர் நம்புகிறது என்று பிரதமர் லீ கூறினார்.

இதற்கிடையில், ஆசியான் சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு அடித்தளமாக உள்ளது என்ற திரு லீ, ஆசியான் ஒரு நிலையான, பாதுகாப்பான வட்டாரத்திலிருந்து பங்களிப்பதற்கும் பயனடையவும் உதவுகிறது என்று குறிப்பிட்டார்.

அதேநேரத்தின் கடந்த நாற்பது ஆண்டுகளின் அமைதியையும் நிலைத்தன்மையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது, குறிப்பாக உலகின் இந்தப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெரிய அதிகார பதட்டங்கள், போட்டிகளுக்கு மத்தியில் என்று அவர் மேலும் கூறினார்.

“அடுத்த 20 ஆண்டுகளுக்கு, போர் நடக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன். நடக்கலாம், ஒருவேளை நடக்காது, ஆனால் விஷயங்கள் தவறாகப் போகலாம், ” என்று பிரதமர் லீ கூறினார்.

“தேசிய மீள்திறன் போலவே வட்டார மீள்திறன் முக்கியமானது, சிங்கப்பூர் ஆசியானில் மிகச் சிறிய உறுப்பினராக இருந்தாலும், அதைக் கட்டியெழுப்பி, அதற்கு பங்களித்து, தொடர்ந்து கடமையாற்ற வேண்டும்.

“நீண்டகால நோக்கில், வட்டாரத்துக்கு முக்கியமானது போரும் அமைதியும் என்ற இரண்டுக்கும் இடையே வட்டாரத்தில் அமைதிக்குப் பங்களிக்க ஆசியான் என்ன செய்ய முடியும் என்பதுதான்,” என்று கூறினார் திரு லீ.

குறிப்புச் சொற்கள்