குவீன்ஸ்டவுனில் அமைந்திருக்கும் 300 படுக்கைகளைக் கொண்ட அலெக்சாண்ட்ரா மருத்துவமனை மறுமேம்பாடு காணவிருக்கிறது.
2028ஆம் ஆண்டு மறுமேம்பாட்டுப் பணிகள் நிறைவுற்றபின், அதில் மொத்தம் 1,300 படுக்கைகள், புதிதாக இரண்டு உயர்மாடிக் கட்டடங்கள் போன்றவை இடம்பெற்றிருக்கும்.
2025ஆம் ஆண்டு முதல் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையும் மறுமேம்பாடு காணும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங், மே 15ஆம் தேதி கூறினார்.
அலெக்சாண்ட்ரா மருத்துவமனையின் நிலந்திருத்தும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
அதிகரிக்கும் தேவைக்கு ஈடுகொடுக்க அரசாங்கம் இத்தகைய மருத்துவமனை மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதாக அமைச்சர் கூறினார்.
ஏப்ரல் மாதம், பிடோக் நார்த்தில் உள்ள ஈஸ்டர்ன் பொது மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. அதில் 1,400 படுக்கைகள் அமைந்திருக்கும்.
அலெக்சாண்ட்ரா மருத்துவமனை 1938ஆம் ஆண்டில் ‘சிங்கப்பூர் பிரிட்டிஷ் ராணுவ மருத்துவமனை’ என்ற பெயரில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. மறுமேம்பாட்டுக்குப் பிறகு, அதில் கொள்ளைநோய்த் தயார்நிலைக்கான அவசர சிகிச்சைப் பிரிவும் அமைந்திருக்கும். தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை நிலையம் ஆகியவற்றுடன் அது நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும்.
அந்த வட்டாரத்தில் வசிக்கும் நோயாளிகளை அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுசெல்ல மருத்துவ உதவி வாகனங்கள் சேவை வழங்கும். தற்போது அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் 24 மணி நேர அவசரப் பராமரிப்பு நிலையம்தான் இயங்குகிறது. அவசர சிகிச்சைப் பிரிவு அதில் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
மறுமேம்பாட்டுக்குப் பிறகு அந்த மருத்துவமனையில் அமைக்கப்படும் 1,300 படுக்கைகளில் அந்திமக்காலப் பராமரிப்பு, மனநலப் பராமரிப்பு பெறும் நோயாளிகளுக்கான படுக்கைகளும் அடங்கும்.
அதே வளாகத்தில் ஏறக்குறைய 400 படுக்கைகளைக் கொண்ட தாதிமை இல்லமும் தனியாகக் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
குவீன்ஸ்டவுன் வட்டாரவாசிகளில் நான்கில் ஒருவர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர். அவ்வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கு மேம்பட்ட சேவை வழங்கும் நோக்கில் அலெக்சாண்ட்ரா மருத்துவமனை மறுமேம்பாடு காண்கிறது.
அலெக்சாண்ட்ரா மருத்துவமனை, தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்புக் குழுமத்தின்கீழ் செயல்படுகிறது. இந்தக் குழுமத்தின்கீழ், சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில், 1,200 படுக்கைகளைக் கொண்ட தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைதான் முக்கியமான அவசர சிகிச்சைப் பிரிவைக் கொண்டுள்ளது.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் கட்டடங்கள் 40, 50 ஆண்டுகள் பழைமையானவை என்று குறிப்பிட்ட அமைச்சர் ஓங், மாறிவரும் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளுக்கு ஈடுகொடுக்க அதன் முழு வளாகத்தையும் மறுமேம்பாடு செய்யத் திட்டமிருப்பதாகவும் கூறினார்.
அடுத்த ஆண்டு தொடங்கும் அதன் மறுமேம்பாட்டுப் பணிகள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஓங் கூறினார்.
மறுமேம்பாடு காணும் அலெக்சாண்ட்ரா மருத்துவமனை அதன் புதிய வசதிகளை 2028ஆம் ஆண்டிலிருந்து கட்டங்கட்டமாகத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.


