சிங்கப்பூர், 2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முழுமையாக நிறுத்தும் இலக்கைக் கொண்டுள்ளது.
தீவு முழுவதும் இருப்போரைக் கொண்டு நடத்தப்பட்ட கருத்தாய்வில் 15 விழுக்காட்டு பங்கேற்பாளர்கள் மட்டுமே அந்த இலக்கை அறிந்திருக்கின்றனர். எனினும், இலக்கு குறித்து தெரியப்படுத்தப்பட்ட பிறகு மூவரில் இருவர் அதன் தொடர்பில் பங்காற்ற மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கருத்தாய்வின் முடிவுகள் புதன்கிழமையன்று (மே 15) வெளியிடப்பட்டன.
கருத்தாய்வில் பங்கேற்றோரில் பாதிக்கும் மேற்பட்டோர் ஏற்கெனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த சில நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளனர். குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலையை 25 டிகிரி செல்சியசுக்குக் குறையாமல் வைத்துக்கொள்வது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகத்தைக் குறைத்துக்கொள்வது போன்றவை அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.
அதேவேளை பலர் எதிர்ப்புகளை வெளிப்படுத்திய இறைச்சி உட்கொள்வது, விமானப் பயணங்கள் மேற்கொள்வதைக் குறைத்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் மேலும் எடுக்கப்படலாம் எனத் தெரிய வந்தது.
இந்தக் கருத்தாய்வு 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 15 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 2,300 பேரைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்தும் சிங்கப்பூரின் இலக்கு, அது சார்ந்த சட்டங்கள் ஆகியவற்றின் தொடர்பில் சிங்கப்பூரின் போக்கை அறிந்துகொள்ளும் நோக்கில் இந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. இலக்குக்கு ஆதரவளிக்கும் வகையில் மக்கள் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதை அறிவதும் நோக்கமாகும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின், அபாயங்கள் குறித்து பொதுமக்களிடையிலான புரிந்துணர்வை அறியும் ஐபுர் பிரிவு, சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் லீ குவான் யூ புத்தாக்க நகரங்கள் நிலையம், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சின் நடத்தையியல் அறிவியல், பொருளியல் ஆய்வுப் பிரிவு ஆகியவற்றுக்காக லாய்ட் ரெஜிஸ்டர் ஃபவுண்டேஷன் கழகம் கருத்தாய்வை நடத்தியது.
கருத்தாய்வில் பங்கேற்றோரில் இளையர்களைவிட 55 வயதைத் தாண்டியோரே சிங்கப்பூரின் கரியமில வாயு வெளியேற்ற இலக்கையொட்டி வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் செய்துகொள்ள அதிக அக்கறை கொண்டுள்ளது தெரிய வந்தது. சிறிய, பெரிய மாற்றங்கள் என இருவகை மாற்றங்களுக்கும் இது பொருந்தும்.

