ஒவ்வொரு மாதமும், முதல் செவ்வாய்க்கிழமையன்று, தியோங் பாரு, பியோ கிரசெண்டில் வசிக்கும் முதியோர் சிலர் புளோக் 26ன் வெற்றிடத் தளத்தில் வரிசையில் பொறுமையாகக் காத்திருப்பர்.
அரை மணி நேரத்திற்குள், அவர்கள் தலைமுடி வெட்டப்பட்டு, புதிய சிகையலங்காரத்துடன் மகிழ்ச்சியுடன், புன்னகை பூத்த முகத்துடன் கிளம்பிச் செல்வார்கள்.
தமது அடையாளமான சிவப்பு நிறத் தொப்பியை அணிந்திருப்பதால் வாடிக்கையாளர் சிலரால் “சிறிய சிவப்புத் தொப்பி” என்று அழைக்கப்படும் திரு மார்க் யுவன், முதியோர் இல்லங்கள், முதியோர் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை முடிதிருத்தும் சேவையை வழங்குகிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல், 69 வயதான ஓய்வுபெற்ற செல்வ ஆலோசகரான திரு யுவன், முதியோருக்கும் ஏழைகளுக்கும் இலவசமாக முடிதிருத்தும் சேவையை வழங்குகிறார்.
கத்தரிக்கோல், சவரக் கருவி (ஷேவர்), சீப்புகளுடன் உலா வரும் திரு யுவன், படுத்த படுக்கையாக அல்லது நகர முடியாமல் இருப்பவர்களின் வீடுகளுக்கும் சென்று சேவை புரிகிறார்.
முடி வெட்டி முடிந்ததும், அவர்கள் நன்றி கூறுவது தமக்குப் புத்துணர்ச்சி அளிப்பதாகக் கூறினார் திரு யுவன்.
“சில நேரங்களில், முடிவெட்டுவது ஒருவருக்குச் சுத்தமாகவும் இளமையாகவும் உணர உதவுகிறது,” என்றார் அவர்.
முடிவெட்டுவது மட்டுமல்ல, திரு யுவனின் முடிவெட்டும் நேரங்கள், அவரது வயதான ஆதரவாளர்களுக்கு ஒன்றுகூடும் நேரமாகவும் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“முதியவர்களை வெளியே அழைத்துச் செல்வது, பிற குடியிருப்பாளர்கள், தொண்டூழியர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, அவர்களுக்கு சமூக அக்கறை, அன்பின் உணர்வைத் தரும் என்று நம்புகிறேன்,” என்று திரு யுவன் கூறினார்.
“தாங்கள் தனியாக இல்லை என்ற உணர்வை அவர்களுக்குத் தரும்,” என்றார் அவர்.
ஓய்வுபெற்ற பிறகு, சமூகத்திற்குத் திரும்பக்கொடுக்கும் வகையில் ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பிய திரு யுவன் 2016ஆம் ஆண்டில் தமது 61வது வயதில் முடிவெட்டக் கற்றுக்கொண்டார்.
150 மணிநேரப் பயிற்சியை முடிக்க அவருக்கு மூன்று மாதங்கள் ஆனது.
சவால்கள் இல்லாமல் இல்லை. நம்மால் முடியுமா என்ற சந்தேகம், முதுகுவலி, கத்தரிக்கோலைப் பிடித்து, கவனம் சிதறாமல் வெட்டுவது என்று அவர் கடக்க வேண்டிய பல சவால்கள் இருந்தன.
பயிற்சியின்போது, படுக்கையில் இருக்கும் முதியவருக்கு இலவசமாக முடிவெட்டினார். அது வசதியற்றவர்களுக்கும் இந்த இலவச சேவையை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் மனத்தில் விதைத்தது.
திரு யுவன் 2016ல், ‘டீம் எம்டிஐ’ என்ற குழுவை உருவாக்கினார். இதில் தொண்டூழியர்கள் அவருடன் இணைந்து முதியவர்களுக்கும், குறைந்த வருமானம் பெறுவோருக்கும் இலவசமாக முடிதிருத்தும் சேவையை வழங்குகின்றனர். வாய்வழியாகவும் ஃபேஸ்புக் பக்கம் மூலமாகவும் குழு பெருகி இப்போது அவர் குழுவில் கிட்டத்தட்ட 100 தொண்டூழியர்கள் உள்ளனர்.
அவர் அணியில் புதிதாக இணைந்த 27 வயது இஸ்மாயில் புவாயோன், மொரோக்கோ நாட்டவர். ஒரு மாதத்திற்கு முன்னர்தான் சிங்கப்பூர் வந்தார்.
தமது சொந்த நாட்டில் இலவச முடி வெட்டும் சேவையையும் இரவு உணவையும் வழங்கும் அவர், “மக்களை மகிழ்ச்சிப்படுத்தவும், வாழ்க்கையில் நல்லவை உள்ளன என்பதைக் காட்டவும் விரும்புகிறேன்” என்றார்.

