புக்கிட் மேரா நகர மையப் புதுப்பிப்பு: கட்டடக் கலைஞர்களின் பரிந்துரைகளுக்குக் கோரிக்கை

புக்கிட் மேரா நகர மையப் புதுப்பிப்பு: கட்டடக் கலைஞர்களின் பரிந்துரைகளுக்குக் கோரிக்கை

2 mins read
8bdd8dfb-fdb8-40e0-8620-0765330010fd
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ‘நமது நகர்ப்புற மறுமேம்பாடு’ (ரீமேக்கிங் அவர் ஹார்ட்லேண்ட்) செயல்திட்டத்தின்கீழ் புக்கிட் மேரா மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் மேரா நகர மையத்தைப் புதுப்பிப்பதற்கு அதன் வடிவமைப்பு தொடர்பில் கட்டடக் கலைஞர்களின் பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்துள்ளது.

இளையர்கள், முதியோர் என இருதரப்பினருக்கும் ஏற்ற வகையில் புக்கிட் மேரா வட்டாரத்தை உருமாற்றுவதற்கான யோசனைகள் வரவேற்கப்படுவதாகக் கழகம் கூறியது.

புக்கிட் மேரா வட்டாரம் எப்படி அந்தப் பெயரைப் பெற்றது என்ற வரலாற்றுக் கதையின் அடிப்படையிலான கருப்பொருளில் அந்த யோசனைகள் அமைந்திருக்க வேண்டும்.

இதற்கான போட்டி, மே 16ஆம் தேதி இடம்பெற்ற சிங்கப்பூர் ஆக்கிஃபெஸ்ட் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

ஜூலை 16ஆம் தேதி வரை இதன்கீழ் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம்.

உள்ளூர்க் கட்டடக் கலைஞர்கள் இதில் பங்குபெறலாம். தற்போது தொழில்செய்வோர் மட்டுமன்றி கட்டடக் கலைத்துறை மாணவர்களும், நிலவனப்பு வடிவமைப்பு தொடர்பான துறைகளில் பயிலும் மாணவர்களும் தனியாகவோ குழுவாகவோ ஒரு நிறுவனமாகவோ இதில் பங்கேற்க முடியும்.

சிங்கப்பூர்க் கட்டடக் கலைஞர்கள் கழகம் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் நகர மைய மேம்பாடு தொடர்பில் கட்டடக் கலைஞர்களின் வடிவமைப்பு யோசனைகளை அது கோருவது இதுவே முதன்முறை என்றும் வீவக கூறியது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ‘நமது நகர்ப்புற மறுமேம்பாடு’ (ரீமேக்கிங் அவர் ஹார்ட்லேண்ட்) செயல்திட்டத்தின்கீழ் புக்கிட் மேரா மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும். பழைய குடியுருப்புப் பேட்டைகளுக்கு புதுப் பொலிவூட்டுவது இத்திட்டத்தின் நோக்கம்.

நான்காவது முறையாக இடம்பெறும் இத்திட்டத்தின்கீழ், புதுப்பொலிவு காணும் நான்கு வட்டாரங்களில் புக்கிட் மேராவும் அடங்கும். அங் மோ கியோ, குவீன்ஸ்டவுன், சுவா சூ காங் ஆகியவை மற்ற மூன்று வட்டாரங்கள்.

ரெட்ஹில், டியோங் பாரு, தெலுக் பிளாங்கா, மவுண்ட் ஃபேபர் போன்ற பேட்டைகள் புக்கிட் மேரா வட்டாரத்தில் அமைந்துள்ளன.

பேருந்து முனையம், பேரங்காடிகள், கடைகள், உணவுக் கடைகள் போன்றவற்றை நாடி, அருகிலுள்ள வட்டாரங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் புக்கிட் மேரா நகர மையத்திற்குச் செல்வதால் அது பரபரப்பாகக் காணப்படுவது வழக்கம்.

குடியிருப்பாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் அந்த மையத்திற்குப் புதுப்பொலிவூட்டுவது அவசியம் என்று வீவக கூறியது.

குறிப்புச் சொற்கள்