சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் சாங்கி விமான நிலையத்தில் தற்போது தானியக்கக் குடிநுழைவு முறையைப் பயன்படுத்த முடியும்.
மே மாதத் தொடக்கத்தில் இந்த நடைமுறை நடப்புக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. முதல்முறை சிங்கப்பூர் வரும் பயணிகள் முதற்கொண்டு அனைவரும் இதைப் பயன்படுத்த முடியும். முன்கூட்டியே அவர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்திருக்க வேண்டியதில்லை.
2019ஆம் ஆண்டு, குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் இந்தத் தானியக்கக் குடிநுழைவு முறை குறித்து அறிவித்தது. குடி நுழைவு நடைமுறையை விரைவாகவும் கூடுதல் பாதுகாப்புடனும் மேற்கொள்வது இதன் நோக்கம்.
முன்னர், இந்தத் தானியக்கக் குடிநுழைவுத் தடங்களை சிங்கப்பூர்வாசிகளும் குறிப்பிட்ட 60 இடங்களில் வழங்கப்பட்ட கடப்பிதழ்களை வைத்திருப்போரும் மட்டுமே பயன்படுத்த முடியும்.
சென்ற ஆண்டு (2023) சாங்கி விமான நிலையத்தில் புதிதாக 160 தானியக்கத் தடங்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு மேலும் 230 தடங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆணையம், 2026ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் சோதனைச்சாவடிகள் அனைத்திலும் ஏறக்குறைய 800 தானியக்கத் தடங்களை அமைக்க இலக்கு கொண்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வழியாக இந்தியா திரும்பிய 46 வயது வர்த்தகர் அதுல் சேத்தி, மே 16ஆம் தேதி இந்தத் தானியக்க முறையின்கீழ் குடிநுழைவு நடைமுறையைப் பூர்த்தி செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருக்க நேர்ந்ததைக் குறிப்பிட்ட அவர், இந்தத் தானியக்க நடைமுறை மூலம் ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் குடிநுழைவு நடைமுறையை நிறைவுசெய்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.
2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கடப்பிதழ் தேவைப்படாத குடிநுழைவு நடைமுறையை அமல்படுத்த சிங்கப்பூர் எண்ணம் கொண்டுள்ளது.
சாங்கி, சிலேத்தார் விமான நிலையங்கள், மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம் ஆகியவற்றுக்கு வந்துசேரும் சிங்கப்பூர்வாசிகளும் இவற்றிலிருந்து கிளம்பிச் செல்லும் அனைத்துப் பயணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் இத்தகைய குடிநுழைவு நடைமுறையைப் பயன்படுத்துவர் என்று தெரிவிக்கப்பட்டது. இவர்கள் கடப்பிதழைக் காட்டும் தேவையின்றி, முக, கருவிழி அடையாளங்களைப் பயன்படுத்தி குடிநுழைவு நடைமுறையை நிறைவு செய்யலாம்.