போதைப் புழக்கத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் தினம் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் சிங்கப்பூரில் போதைப்பொருள் நிலவரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க சிங்கப்பூரர்கள் உறுதியாக நின்று, இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் உலகின் பல நாடுகள் துரதிர்ஷ்டவசமாகத் தாராள அணுகுமுறையைக் கைக்கொண்டு வருவதாகச் சுட்டிய அமைச்சர், இங்கு நடப்பில் உள்ள போதைப்பொருள் சார்ந்த கொள்கைகள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காத்து வருவதாகக் கூறினார்.
2023ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிகழ்ந்த போதைப்பொருள் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 100,000க்கும் அதிகம் என்று அண்மையில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பிசி) குறிப்பிட்டது. அதைச் சுட்டிய அமைச்சர் சண்முகம், சிங்கப்பூரில் இதன் தொடர்பில் 20 மரணங்கள் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு சிஎன்பிசி ஏறத்தாழ S$15 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்களைக் கைப்பற்றியது எனவும் ஒப்புநோக்க வெறும் பதினொரு மாதங்களில் ஹாங்காங் S$760 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்களைக் கைப்பற்றியது என்று கூறிய அமைச்சர் சண்முகம், போதைப்பொருளுக்கு எதிரான அணுகுமுறையில் நாம் சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும், நாம் அதில் நிலைத்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நமது அணுகுமுறை தவறாகக் கையாளப்பட்டால், உலகளாவிய அளவில் பிற நாடுகளில் ஏற்பட்ட போதைப்பொருள் தொடர்பிலான வன்முறை மற்றும் பாதிப்புகள் நமக்கும் நேரிடலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
போதைப் புழக்கத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் வகையில் முதன்முறையாக நடைபெற்ற இந்நிகழ்வு இனி ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வு போதைப்பொருள்களால் உண்டாகும் தீங்குகளை சமூகத்தின் விழிப்புணர்வு நிலைக்கு முன்வைப்பதற்கான சிங்கப்பூரின் திடமான நோக்கத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறிய அமைச்சர், சிங்கப்பூர் போதைப்பொருள் நிலவரத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் சொன்னார்.
சவால்கள் இதன் தொடர்பில் இல்லாமல் இல்லை என்பதைச் சுட்டிய அமைச்சர், போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்பு போதைப் புழங்கிகளைத் தாண்டி அவரது குடும்பத்தினர், மற்றும் அன்பிற்குரியோர் ஆகியோரையும் மறைமுகமாக, சத்தமின்றி பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்றார்.
மேலும் சமூகமும் இவற்றால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், போதைப் புழங்கிகளைப் பராமரிப்பதன் தொடர்பிலான பாரத்தை போதைப் புழங்கிகளின் குடும்பத்தினர் சுமக்கின்றனர் என்றும் மேலும் போதைப் பித்தர்கள் மற்றும் அவர்களின் போதைப்பொருள் சார்ந்த பழக்கத்திற்கு எதிராக வழங்கப்படும் பராமரிப்பின் தொடர்பில் சமூகமும் அதிகப்படியான சுகாதாரச் செலவினங்களை ஏற்க வேண்டியுள்ளது என்றார்.
போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டு வந்தோரைப் பாராட்டிய அமைச்சர் சண்முகம், அனைத்துலக அளவிலான போதைப்பொருள் நிலவரம், போதைப் புழக்கம் மீது இளையர்களுக்கு அதிகரித்துவரும் தாராள மனப்போக்கு குறித்தும் உரையாற்றினார்.
போதைப் பழக்கத்தின் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், குறிப்பாக போதைப் பித்தர்களின் குடும்பங்கள், மற்றும் பாசத்திற்குரியவர்கள் சகிக்க நேரும் ஆழமான தீங்குகள், வருத்தங்கள், அதிர்ச்சிகள் குறித்து வெளிப்படுத்துவதும் இந்த போதைப் புழக்கத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் தினத்தின் நோக்கம். மேலும் மேற்கூறிய இலக்கின் தொடர்பில் சமூக ஆதரவைத் திரட்டுவதும் எண்ணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின்போது, போதைப்பொருளால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர மெழுகுவத்திகள் ஏற்றி வைக்கப்பட்டன. அடுத்த எட்டு வாரங்களுக்கு, மாணவர்கள் மத்தியிலும் சமூகத்திலும் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும் நாட்டின் எட்டு வெவ்வேறு இடங்களில் கண்காட்சிகள் நடைபெறும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.