தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆப்பிள் கடிகாரத்தைத் திருடிய தீயணைப்பு வீரர்

2 mins read
e128c163-076e-45f4-a129-4f23ef1d06fe
மே 17ஆம் தேதி, எர்னெஸ்ட் டே சிஹெங் தன் மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: பிக்சாபே

தீயணைப்புப் பணிக்கு அனுப்பப்பட்டபோது சம்பவ இடத்திலிருந்து ‘ஆப்பிள்’ கைக்கடிகாரத்தைத் திருடியதற்காக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மே 17ஆம் தேதி, எர்னெஸ்ட் டே சிஹெங் தன் மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2023 செப்டம்பர் 1ஆம் தேதி காலை 7 மணியளவில், புளோக் 114 அங் மோ கியோ அவென்யூ 4ல் தீ மூண்டிருக்கலாம் என்று புகாரளிக்கப்பட்டதால் குடிமைத் தற்காப்புப் படை, தீயணைப்பு வீரர் குழுவை அங்கு அனுப்பியது.

அப்போது தேசிய சேவையாளராக இருந்த டேயும் அந்தக் குழுவில் இருந்தார்.

வீட்டின் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பை முன்னிட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த வீட்டிலிருந்து டே திருடிய ‘ஆப்பிள்’ கைக்கடிகாரத்தின் மதிப்பு 332 வெள்ளி எனக் கூறப்பட்டது.

சம்பவ நாளில் அந்த வீட்டில் தீ மூளவில்லை என்றும் அது வெறும் புகை என்றும் விசாரணையில் தெரியவந்தது.

திருடிய ஆப்பிள் கைக்கடிகாரத்தை அங் மோ கியோ தீயணைப்பு நிலையத்துக்கு எடுத்துச் சென்ற டே, தனது செயலுக்கு வருத்தப்பட்டார். பின்னர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தெம்பனிஸ் விரைவுச்சாலையில் அதைப் புல்வெளியில் வீசிவிட்டார்.

கடிகாரத்தைப் பறிகொடுத்த 30 வயதுப் பெண், தனது கைப்பேசிச் செயலி மூலம் அங் மோ கியோ தீயணைப்பு நிலையத்தில் அது கடைசியாகப் பயன்படுத்தப்பட்டதைக் கண்டுபிடித்தார்.

விசாரணையில், டே அதைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கைக்கடிகாரத்தைக் கண்டுபிடிக்க இயலாததால், டே அதற்கான முழுத்தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்