லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த எஸ்கியூ321 விமானம், மே 21ஆம் தேதி திடீரென்று 6,000 அடி கீழ்நோக்கிச் சரிந்தபோது பயணிகளுக்குச் சிப்பந்திகள் உணவு வழங்கிக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
காற்றின் நிலை சரியில்லாததால் விமானம் கடுமையாக ஆட்டங்கண்டதில், விமானத்தினுள் பொருள்கள் சிதறியதுடன் பயணிகள் சிலரும் இருக்கையிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.
சிங்கப்பூர் வந்துசேர்ந்த பிறகு ராய்ட்டர்சிடம் பேசிய 28 வயதுப் பயணி ஸஃப்ரான் அஸ்மீர், “மக்கள் விமானத்தின் உட்கூரைப் பகுதியில் மோதிக் கீழே விழுவதைக் காணமுடிந்தது. அதனால் அவர்களுக்குத் தலையில் வெட்டுக்காயங்களுடன் அதிர்ச்சியும் ஏற்பட்டது,” என்று தெரிவித்தார்.
தலைக்குமேல் இருந்த விளக்குகளில் பலரின் தலைகள் வலுவாக மோதுவதைக் காணமுடிந்ததாகப் பயணிகள் செய்தியாளர்களிடம் கூறினர்.
அப்போதுதான் கழிவறையிலிருந்து வெளியே வந்ததாகக் கூறிய ஓர் ஆடவர், விமான உட்கூரைப் பகுதியில் தனது தலையும் தன் மனைவியின் தலையும் மோதியதாகக் கூறினார். நடந்துகொண்டிருந்த சில பயணிகள் ‘கரணம் அடித்ததைக்’ கண்டதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தாங்களும் காயப்பட்டிருந்த நிலையில் விமானச் சிப்பந்திகள் தங்களால் ஆன அளவிற்குக் காயப்பட்ட பயணிகளுக்கு உதவியதாக அவர் குறிப்பிட்டார்.
குடும்பத்துடன் பயணம் செய்த டிரூ கெஸ்லர் எனும் பயணி தனக்குக் கழுத்து எலும்பு உடைந்ததாகவும் தன் மனைவிக்கு முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் மே 22ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் அதிபர் ஆலோசகர்கள் மன்ற முன்னாள் உறுப்பினரான சிங்கப்பூரர் பாபி சின்னும் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் அடங்குவார். தாமும் தமது மனைவியும் இச்சம்பவத்தில் காயமடைந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அவர் கூறினார்.
தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென்று விமான உட்கூரைப்பகுதியில் தூக்கி வீசப்பட்டுப் பிறகு கீழே விழுந்ததில் கண் விழித்ததாகக் கூறினார் 30 வயது ஆஸ்திரேலியரான டியான்ட்ரா துக்குனென்.
பேங்காக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர், ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில், “இருக்கைவார் அணியக்கூறும் சமிக்ஞை வெளியான சில வினாடிகளுக்குள் இச்சம்பவம் நேர்ந்தது. அனைவரும் மிகவும் அச்சமடைந்திருந்தோம். விமானிகள்தான் எங்கள் உயிரைக் காப்பாற்றினர்,” என்று கூறினார்.
எஸ்கியூ321 விமானம் கடுமையாக ஆட்டங்கண்ட சம்பவத்தில் அதில் பயணம் செய்த 73 வயது பிரிட்டிஷ் ஆடவர் ஜெஃப்ரி கிச்சன் மாண்டார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.