நச்சுவாயு தாக்கி மே மாதம் 23ஆம் தேதி உயிரிழந்த 40 வயது இந்திய ஊழியர் சீனிவாசன் சிவராமனின் உடல், கூறாய்வுக்குப் பிறகு அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஒன்றுதிரண்ட அவரின் நண்பர்கள் “சிங்கப்பூருக்கு உழைக்க வந்தவர் நீண்ட உழைப்பிற்குப் பிறகு தனது பூர்வீகக் கிராமத்தில் நிரந்தரமாக உறங்கச் செல்கிறார்,” என்றவாறு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே, சிவராமனின் மைத்துனர் மோகன் நவின்குமார், 33, சிவராமனின் நல்லுடலை ஞாயிறு மதியம் சுமார் 12.15 மணியளவில் மருத்துவமனையிலிருந்து பெற்றுக்கொண்டார்.
சிவராமனின் நல்லுடல் இறுதிச்சடங்கிற்காக மே 28ஆம் தேதி இரவு விமானம் மூலம் தஞ்சாவூரில் உள்ள கம்பர்நத்தம் எனும் அவரின் சொந்தக் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
மேற்கூறிய தகவலை தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்ட மோகன் நவின்குமார், “சிவராமனின் நல்லுடல், மே 29 புதன்கிழமை காலை சொந்த ஊரைச் சென்றடையும். பிறகு குடும்பத்தினர், ஊர் மக்கள் பார்வைக்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அன்று மதியம் குடும்ப வழக்கப்படி எரியூட்டப்படும்,” என்று தெரிவித்தார்.
முன்னதாக, உடலைப் பதப்படுத்தும் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த சிவராமனின் உடலுக்கு, சிங்கப்பூரில் வசிக்கும் அவரின் நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், இந்திய ஊழியர்கள் என ஏறத்தாழ 50க்கும் மேற்பட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
சிவராமனுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்திருந்தவர்களில் 29 வயதான இந்திய ஊழியர் சாத்தப்பிள்ளையும் ஒருவர். சிவராமனின் இறப்பை நம்ப முடியவில்லை என்று சொன்ன அவர், “மறைந்த சிவராமனை எனக்கு ஆறு ஆண்டுகளாக தெரியும். சொந்த சகோதரர் போலவே என்னை நடத்தி வந்தார். எந்த நேரமானாலும் சரி, எந்த உதவி என்றாலும் சரி, கேட்டவுடன் ஒருபோதும் மறுக்காமல் உதவி செய்துதரும் நல்ல மனிதர் அவர்,” என்று தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
சிவராமனின் 75 வயது தாயார், மனைவி நர்மதா (35), ஒன்பது மற்றும் ஏழு வயதுகளுடைய இரு பெண் பிள்ளைகள், சொந்த கிராமத்தினர் என ஏராளமானோர் இல்லத்தில் கடந்த நான்கு நாள்களாகக் காத்திருக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“மாமாவின் மூப்படைந்த தாயாரின் மருத்துவச் செலவு, இரு பிள்ளைகளின் கல்விச் செலவு, குடும்பப் பராமரிப்பு என மொத்த செலவுகளையும் ஒற்றை ஆளாகக் கவனித்து வந்த மாமா இல்லாமல் போய்விட்டார். இனி எதிர்காலம் எப்படி என்று மாமாவின் குடும்பத்தினர் கேட்கும் கேள்விகளுக்கு என் பதில் வெறும் மௌனம் மட்டுமே,” என்ற காலமான தன் மாமாவுடன் கனத்த இதயத்துடன் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்லும் நவின்குமார் கூறினார்.

