வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), ‘ஓப்பன் கான்சப்ட்’ எனப்படும் தடுப்புச் சுவர்கள் இல்லாத புதிய வகை வீடுகளைக் கட்டவிருக்கிறது.
இந்த வீடுகள் ‘ஒய்ட் ஃபிளட்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன.
முன்னோடித் திட்டத்தின்கீழ், காலாங்-வாம்போ வட்டாரத்தில் அக்டோபரில் விற்பனைக்கு விடப்படும் பிடிஓ வீடுகள் இத்தகைய ‘ஒய்ட் ஃபிளட்ஸ்’ வீடுகளாக இருக்கும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மே 27ஆம் தேதி, இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
வீட்டு உரிமையாளர்கள் தங்கள் தேவை, விருப்பத்துக்கு ஏற்ப வீட்டின் உட்புறத்தை வடிவமைத்துக் கொள்ள இத்திட்டம் வாய்ப்பளிக்கும்.
லாவண்டர் ரயில் நிலையத்திற்கு அருகே நார்த் பிரிட்ஜ் ரோட்டுக்கும் கிராஃபர்ட் ஸ்திரீட்டுக்கும் இடையிலான நிலப்பகுதியில், இத்தகைய 80 மூன்றறை வீடுகளும் 230 நாலறை வீடுகளும் கட்டப்படும்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஹோ பீ அரங்கில் நடைபெற்ற பல்கலைக்கழகப் புகுமுக மாணவர்களுக்கான கருத்தரங்கில் அமைச்சர் லீ உரையாற்றினார்.
தங்கள் குழந்தைகள் வீட்டிற்குள் இடையூறின்றி ஓடி விளையாடுவதை விரும்பும் இளம் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோருக்கு இத்தகைய வீடுகள் பொருத்தமானவை என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
பின்னாளில் குழந்தைகள் வளர்ந்த பின்னர் அவர்கள் தங்கள் புதிய தேவைக்கேற்ப வீட்டின் உட்புறத்தை மாற்றியமைத்துக் கொள்ளமுடியும் என்பதை அவர் சுட்டினார்.
‘முன்னேறும் சிங்கப்பூர்’ கருத்துத் திரட்டின்போது இளம் சிங்கப்பூரர்கள், வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் மாறும் தேவைகளுக்கு ஏற்ப வீட்டின் உட்புறத்தை மாற்றி அமைத்துக்கொள்ளும் நீக்குப்போக்கு தேவை என்று கருத்துரைத்ததாகத் திரு லீ கூறினார்.
அரசாங்கம் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு, கட்டடக் கலைஞர்களுடனும் பொறியாளர்களுடனும் இணைந்து சாத்தியமானவற்றை ஆய்வு செய்ததாக அவர் சொன்னார்.
வீடு வாங்குவோர், வீட்டுக்குப் பதிவுசெய்ய அழைக்கப்படும்போது ‘ஒய்ட் ஃபிளட்’டைத் தெரிவுசெய்யலாம். அவ்வாறு தெரிவு செய்யாதோருக்கு வழக்கமான, இடையில் சுவர்களைக் கொண்ட வீடுகள் ஒதுக்கப்படும் என்று வீவக கூறியது.

