ரோட்டரி அனைத்துலக மாநாடு 2024 இவ்வாண்டு இரண்டாவது முறையாக சிங்கப்பூரில் நடைபெற்றது.
மே 26 ஆம் தேதியன்று மரினா பே சாண்ட்ஸ் எக்ஸ்போ மற்றும் மாநாட்டு மையத்தில் 14,000 பங்கேற்பாளர்களுடன் மாநாடு தொடக்கம் கண்டது.
முன்பு 1999ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற இம்மாநாடு, இவ்வாண்டு 120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களின் ஆதரவுடன் நடந்தேறியது.
மே 25 முதல் 29 வரை சிங்கப்பூரில் நடைபெற்ற இம்மாநாடு சிங்கப்பூர் சுற்றுலா அமைப்பு ஆதரவுடன் நடைபெற்றது.
சிங்கப்பூரின் மிகப்பெரிய சங்க நிகழ்வின் கருப்பொருள் ‘உலகத்துடன் நம்பிக்கையைப் பகிர்வது’ என்பதாகும்.
ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் ரோட்டரியின் மாநாடுகளில், உறுப்பினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு உருவாக்குவதற்கும், மற்ற நாடுகளின் கலாசாரத்தை கற்றுக்கொள்வதற்கும் ஒரு தளமாக செயல்படுகின்றது.
மேலும், அவர்களின் சமூகங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க எவ்வாறு நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்த நிபுணர்களின் கருத்தும் இருக்கும்.
அங்கு இடம்பெற்ற ‘நட்பின் வீடு’ என்ற கண்காட்சியில், 100 க்கும் மேற்பட்ட மனிதாபிமான திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. உலகத் தரம் வாய்ந்த பேச்சாளர்களிடமிருந்தும் உத்வேகம் பெறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ரோட்டரி அனைத்துலக தலைவர் கோர்டன் மெக்கினலி, “சிங்கப்பூரில், உலகெங்கிலும் உள்ள பல நண்பர்களுடன் மீண்டும் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
எங்கள் தொண்டூழியம் மூலம் நாங்கள் கொண்டு வரும் மகிழ்ச்சியைக் கொண்டாடவும், எதிர்காலத்தில் மக்கள் மற்றும் சமூகங்கள் செழிக்க தொடர்ந்து எவ்வாறு உதவ முடியும் என்பதை அறியவும் இம்மாநாடு மிகவும் உதவுகின்றது,’’ என்றார்.
ரோட்டரி அமைப்பு
உலகின் மிக முக்கியமான மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதற்கும் நீடித்த மாற்றத்தை உருவாக்குவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பு ரோட்டரி. உலகில் கிட்டத்தட்ட 46,000 க்கும் மேற்பட்ட ரோட்டரி குழுவிலிருந்து 1.4 மில்லியன் மக்களை ரோட்டரி இணைக்கிறது.
‘போலியோ பிளஸ்’ என்னும் திட்டம் ரோட்டரி 1985 உருவாக்கியது. போலியோ என்பது முதுகெலும்பு அல்லது மூளைத் தண்டில் உள்ள நரம்புகளை பாதிக்கும் வைரஸால் ஏற்படும் நோய் ஆகும். ரோட்டரி இதை முற்றிலும் ஒழிக்க போலியோ தடுப்பூசி பிரசாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று , போலியோ 99.9 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ரோட்டரி அமைப்புக்கு மிகவும் ஆர்வத்துடன் பங்கை அளிக்கும் திவாகரன் கலைவாணன், 26, தற்போது மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதியாக உள்ளார்.
சிங்கப்பூர், மலேசியா மற்றும் புருணை முழுவதும் 36 ரோட்டராக்ட் குழுவை வழிநடத்துகிறார். தனது ரோட்டரி பயணத்தின் ஊக்குவிப்பு, ஐடிஇ கல்லூரி கிழக்கில், ‘இன்டராக்ட் கிளப்’ என்பதிலிருந்து தொடங்கியது.
ரோட்டரி அனைத்துலக மாநாட்டில், பங்கேற்பாளர்களுக்குள் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் குறித்து அவர் பேசினார்.
அவர் ஜூன் மாதம் நடைபெறும் ஆசிய பசிபிக் பிராந்திய ரோட்டராக்ட் மாநாட்டின் தலைவராக இருக்கிறார்.
உதவி தேவைப்படுபவர்களுக்கு, எவ்வாறு திறம்பட அதை அளிப்பது என்ற தாக்கத்தை அதிகரிப்பதே திவாகரனின் குறிக்கோள் ஆகும்.
“ஜூன் மாதம் நடைபெறும் மாநாட்டில், நான் ஒரு புதிய கண்ணோட்டத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல இருக்கிறேன். இளையர்களின் கருத்து, பலதரப்பட்ட கலாசாரம் இருக்கும் சமூகத்தின் கண்ணோட்டம் ஆகியவை இடம்பெறும்,” என்றார் அவர்.
இம்மாநாட்டில் கடலூரிலிருந்து வந்து பங்கேற்ற மின் பொறியாளர் பூங்குன்றன் தர்மலிங்கம், 54, “ஒவ்வோர் ஆண்டும் இம்மாநாட்டில் கலந்துகொள்கிறேன். 1998இலிருந்து நான் இந்த அமைப்பில் உள்ளேன்.
“உதவி தேவைப்படுபவர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யப்படுகின்றன என்று பல நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பகிர்ந்துகொள்வது அனைவருக்கும் உற்சாகமானதாக அமையும்,’’ என்றார்.

