சிங்கப்பூருக்கான அறிமுகப் பயணத்தின்போது, சீனாவின் தற்காப்பு அமைச்சர் டோங் ஜுன், பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் ஆகியோரைச் சந்திப்பார்.
வியாழக்கிழமை (மே 30) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொள்வார் என்று தற்காப்பு அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்தது.
தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் உடன் மூன்றாவது சிங்கப்பூர்- சீன தற்காப்பு அமைச்சர்களின் கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கிய திரு டோங்கிற்கு, வியாழக்கிழமை காலை தற்காப்பு அமைச்சில் மரியாதை அணிவகுப்புடன் வரவேற்பளிக்கப்பட்டது.
திரு டோங்கும் டாக்டர் இங்கும் “வழக்கமான உயர் மட்ட பரிமாற்றங்கள் மூலம் இருதரப்பு தற்காப்பு உறவில் நேர்மறையான உத்வேகம், ராணுவத் தொடர்புகள், ராணுவ நிறுவனங்களுக்கு இடையில் வளர்ந்து வரும் கல்விப் பரிமாற்றங்களை மறுஉறுதிப்படுத்தினர்.
“ராணுவங்களுக்கு இடையிலான ஆறாவது பயிற்சி, கடற்படைகளுக்கு இடையிலான மூன்றாவது கடல்சார் பயிற்சிகளை இந்த ஆண்டு சீனாவில் நடத்த இரு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்,” என்று தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.
சாங்கி கடற்படைத் தளத்திற்குச் செல்லும் திரு டோங், சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் ஆர்எஸ்எஸ் ஸ்ட்டெட்ஃபாஸ்ட் போர்க்கப்பலையும் சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் அரும்பொருளகத்தையும் பார்வையிடுவார்.
ஷங்ரிலா கலந்துரையாடலில் ‘அனைத்துலகப் பாதுகாப்பில் சீனாவின் அணுகுமுறை’ என்ற தலைப்பிலான அமர்வில் ஞாயிற்றுக்கிழமை திரு டோங் பேச உள்ளார்.