சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் ஆகப் பெரிய வழக்கில் சீன நாட்டு மாதான லின் பாவ்யிங் என்பவருக்கு வியாழக்கிழமை (மே 30) அன்று 15 மாதச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
லின்னுக்கு வயது 44. அவர் மீது 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றில் மூன்றை அவர் ஒப்புக்கெண்டார்.
அவற்றில் ஒன்று சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பானது. மற்ற இரண்டு போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மையான ஆவணம் எனக் காட்டியது.
இவர் மீது சுமத்தப்பட்ட மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வர்த்தக விவகாரப் பிரிவு தீவு முழுவதும் ஆடம்பர வீடுகளில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 10 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் லின் தண்டனை விதிக்கப்பட்ட எட்டாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது கைதுக்குப் பின் அவரிடமிருந்து $170.5 மில்லியனுக்கும் மேலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு சொத்துகள் அரசுடைமையாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து நீதிமன்றத்தில் வாதிட்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர் கான் ஈ கியட், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு முன் திருவாட்டி லின் சிஐஎம்பி வங்கி வாடிக்கையாளர் சேவைப் பிரிவு மேலாளர் ஒருவருக்கு, தான் சீனாவில் ஒரு சொத்தை விற்றதாகக் காண்பிக்கும் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தைக் கொடுத்தார்.
லின்னின் வங்கிக் கணக்கில் போடப்பட்ட நிதிக்கு ஆதாரம் கேட்ட வங்கியிடம் காண்பிக்க, அந்தப் போலி ஆவணத்தை பெறுமாறு திருவாட்டி லின் தமது உதவியாளரை பணித்ததாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
லின்னுக்கு அந்தச் சொத்தை வாங்கியவர் யார் என்று தெரியாது எனவும் தெரிவித்த அரசு வழக்கறிஞர், திருவாட்டி லின் அந்த ஆவணத்தில் கையெழுத்திடவும் இல்லை என்று விளக்கினார்.
இதுபோல் தனது யுஓபி கே ஹியன் பங்குச் சந்தைக் கணக்கில் போடப்பட்டப் பணத்திற்கு அந்தப் பங்குப் பரிவர்த்தனை நிறுவனம் நிதி ஆதாரம் குறித்த கேள்வி எழுப்பியது. இதிலும் முன்போல் தான் மக்காவ் தீவில் சொத்து விற்றதாகப் போலியாகத் தயாரித்த ஆவணத்தை லின் சமர்ப்பித்ததாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

