ஜூன் முதல் பாதியில் வறண்ட வெப்பமான வானிலை

2 mins read
3f1544e5-115f-46d2-a9ba-a22810a425a4
ஜூன் முதல் பாதியில் பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

கடந்த இரண்டு வாரங்களில் தீவின் பாதி பகுதியில் சராசரிக்கும் அதிகமான மழை பெய்ததை அடுத்து, ஜூன் மாதத்தின் முதல் பாதியில் சிங்கப்பூரின் வானிலை வறட்சியாக இருக்கும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு சேவை (எம்எஸ்எஸ்) வெள்ளிக்கிழமை (மே 31) தெரிவித்தது.

சில நாட்களில் காலையின் பிற்பகுதியிலும் பிற்பகலிலும் சில பகுதிகளில் குறுகிய கால இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஜூன் மாதத்தின் முதல் பாதியில், தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவாகவே மழைப் பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல நாள்களில் வெப்பநிலை மிதமாக இருக்கலாம், குறிப்பாக ஜூன் இரண்டாவது வாரத்தில்.

பெரும்பாலான நாட்களில், வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சில நாட்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும்.

இரவுகள் சூடாகவும் ஈரப்பதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது, பல இரவுகளில் வெப்பநிலை 28 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்கும்.

கடந்த இரண்டு வாரங்களாக, பெரும்பாலான நாட்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

அன்றாட அதிகபட்ச மொத்த மழை 84.2 மில்லி மீட்டர் பாசிர் லாபாவில் பதிவானது.

மே மாதத்தின் இரண்டாம் பாதியில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான நாட்களில் 33 டிகிரி செல்சியசுக்கு மேல் இருந்தது. மே 29ஆம் தேதி புலாவ் உபினில் 35.3 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.

குறிப்புச் சொற்கள்