சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட $3 பில்லியன் பெறுமானமுள்ள சொத்துகள் பல்வேறு குற்றம் புரிந்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்ட 10 பேருக்கு சொந்தமானதல்ல என்று தெரியவந்துள்ளது.
மாறாக, அவை மற்ற 27 பேருக்கு சொந்தமானவை.
இதுபற்றி புதன்கிழமை (ஜூன் 5ஆம் தேதி) அன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த காவல்துறை, விசாரணை வளையத்தில் 17 பேர் இருப்பதாகத் தெரிவித்தது.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் குறித்து நீதிமன்ற உத்தரவின்படி விற்பனை செய்யப்படும் என்றும் அதுவரை அவற்றை கையாள முடியாது என்றும் காவல்துறை கூறியது.
இதன் தொடர்பில் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கைது செய்யப்பட்ட 10 பேரில் எண்மருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் 13லிருந்து 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சு ஜியான்ஃபெங், வாங் டெஹாய் என்ற மற்ற இருவர் இவ்வாரம் தங்கள் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்ற ஆவணங்கள், வழக்கின் பிரமாண வாக்குமூலங்களின்படி அந்த 10 வெளிநாட்டவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட $900 மில்லியன் ரொக்கம், மற்ற சொத்துகள் யாவையும் அரசாங்கத்துக்கு சொந்தமானதாக அறியப்படுகிறது.
இது இப்படியிருக்க, மீதி $2.1 பில்லியன் பெறுமானமுள்ள ரொக்கம், சொத்துகள் யாவும் வேறு 17 பேருடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சு ஷுவிமிங், 39, சு ஷுய்ஜுன், 37, ஆகிய இருவர் காவல்துறை விசாரணை தொடங்கிய நிலையில் நாட்டை விட்டு ஓடிவிட்டதாகத் தெரிகிறது.
அவ்விருவரும் நாட்டை விட்டு ஓடியபின் அவர்களிடமிருந்து ரொக்கமாகவும் சொத்துகளாகவும் $350 மில்லியனுக்கும் மேலாக பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

