புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் தனது மனைவியைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 88 வயது ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலியில் உள்ள அந்த ஆடவர் மீது வியாழக்கிழமையன்று (ஜூன் 6) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
74 வயது அமினா அப்துல் எனும் மாதை சந்தேக நபரான ரிடாவி மொர்சுடின் கொன்றதாக நம்பப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) மாலை 6.40 மணிக்கும் அன்று நள்ளிரவுக்குப் பிறகு 12.58 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து குற்றச்சாட்டில் குறிப்பிடப்படவில்லை.
வெள்ளை முடியுடன் இருந்த சந்தேக நபர் காணொளிவழி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சக்கர நாற்காலியுடன் அவரின் இடது கைக்கு விலங்கு மாட்டப்பட்டிருந்தது.
மலாய் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் அவர் நீதிமன்ற விவாதங்களைக் கவனித்தார்.
மனநலப் பரிசோதனைக்காக சாங்கி சிறைச்சாலையில் உள்ள மருத்துவ நிலையத்தில் ரிவாடியைத் தடுப்புக் காவலில் வைக்குமாறு காவல்துறை அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார். குற்றத்தின் பின்விளைவுகளை ரிவாடி அறிந்துள்ளாரா என்பதை அறியவும் அவருக்கு இருக்கக்கூடிய மனநலப் பிரச்சினைகளைக் கண்டுபிடிக்கவும் அவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள ரிவாடியை மூன்று வாரங்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்குமாறு மாவட்ட நீதிபதி டான் ஜென் ட்செ உத்தரவிட்டார். நீதிமன்ற விசாரணை ஜூன் மாதம் 25ஆம் தேதி தொடரும்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் குறித்து ஜூன் நான்காம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு ஒரு மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை முன்னதாகத் தெரிவித்தது. வீட்டில் திருவாட்டி அமினா பேச்சு மூச்சின்றிக் கிடந்ததை அதிகாரிகள் கண்டனர்.
நள்ளிரவுக்குப் பிறகு 12.45 மணியளவில் உதவி கேட்டு தங்களுக்கு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. திருவாட்டி அமினா சம்பவ இடத்திலேயே மாண்டதை மருத்துவ உதவியாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

