உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய $3 பில்லியன் மோசடி வழக்கில் விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இந்த நிலையில் சிங்கப்பூர் வங்கிகள் தமது பணக்கார வாடிக்கையாளர்களை விசாரித்து வருகின்றன.
சிங்கப்பூரில் உள்ள பல்வேறு வங்கிகளை மோசடிக்காரர்கள் பயன்படுத்தியிருப்பதால் பணக்கார வாடிக்கையாளர்களை அவ்வங்கிகள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.
அத்தகையவற்றில் சிட்டிகுருப், டிபிஎஸ் குழுமம் உள்ளிட்ட வங்கிகளும் அடங்கும்.
சட்டவிரோதமாகப் பணம் வெளியேறுவதையும் உள்வருவதையும் தடுப்பது, அதில் மற்ற வாடிக்கையாளர்கள் பாதிக்காமல் இருப்பது கண்காணிப்பின் நோக்கமாகும்.
மேலும், பணம் வருவதையும் தங்களுடைய பின்னணியையும் மறைப்பதற்காக சில வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் தந்திரங்களைக் கண்டுபிடிப்பதற்காக தனியார் வங்கிகளுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சியும் வழங்கப்படவிருக்கிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது, ஒரு தன்னிச்சையான நடவடிக்கையாகும். குற்றவாளிகள் பயன்படுத்தும் குறுக்கு வழிகளை கடன் வழங்கும் நிறுவனங்கள் எப்படி தடுத்து நிறுத்தப் போகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
இணையவழி சூதாட்டத்தின் மூலம் கிடைத்த $3 பில்லியனுக்கு மேற்பட்ட தொகையை சிங்கப்பூரில் உள்ள குறைந்தது 16 நிதி நிறுவனங்கள் வழியாக நல்ல பணமாக மாற்றுவதற்கு குறுக்கு வழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம், சிங்கப்பூரின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டு மல்லாமல் இங்குள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கண்காணிப்பதில் பலவீனமாக இருப்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் சிங்கப்பூர் நாணய ஆணையம், வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சில வங்கிகளில் நேரடிச் சோதனைகளை நடத்தியிருக்கிறது.
குற்றவாளிகளுக்கு வைப்புத் தொகை கணக்கு, கடன், மற்றும் இதர நிதி சேவைகளை வழங்கிய கடன் வழங்கும் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறியிருந்தால் பரிசீலனைக்குப் பிறகு அவற்றின் மீது நிதி ஒழுங்கு அமைப்புகள் நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே சிங்கப்பூரிலிருந்து தப்பியோடிய 17 தனிப்பட்டவர்கள் மீது அதிகாரிகளின் கவனம் திரும்பியுள்ளது. இவர்களில் சிங்கப்பூரர்களும் அடங்கியுள்ளனர்.
தப்பியோடியவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை இது பற்றி கூறியிருந்தது.
இதன் தொடர்பில் வெளிநாட்டு அமலாக்க அமைப்புகளை அது தொடர்புகொண்டு விவரங்களை பகிர்ந்து வருகிறது.
ஏற்கெனவே தேடப்படும் நபர்களில் இருவரின் அடையாளங்களை காவல்துறை அடையாளம் கண்டுபிடித்துள்ளது. இருவருக்கும் தொடர்புடைய $166.2 மில்லியனை ரொக்கமாகவோ, சொத்துகளாகவோ அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர் அல்லது முடக்கி வைத்துள்ளனர்.