ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவை பொதுநலனுக்காக பயன்படுத்த வலுசேர்க்கும் திட்டம்

ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவை பொதுநலனுக்காக பயன்படுத்த வலுசேர்க்கும் திட்டம்

2 mins read
522c6222-4716-4580-80ac-4e72bc11732a
தேசிய நூலக வாரியத்தின் ஆகப்பெரிய தகவல் அறிதிறன் விழாவாகக் குறிப்பிடப்படும் இந்த ஆண்டிற்கான ‘S.U.R.E’ சமூக நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து, அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிக்கூடங்களைப் பார்வையிடும் தகவல், தொடர்பு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் (நடுவில்). - படம்: தேசிய நூலக வாரியம்
multi-img1 of 3

ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவை பொதுநலனுக்காக எவ்வாறு வலுவாக பயன்படுத்துவது என்பது குறித்த வளமான வாய்ப்புகளை அனைவருக்கும் அளிக்கும் நோக்குடன், இந்த ஆண்டிற்கான மக்களைச் சென்றடையும் தகவல் அறிதிறன் திட்டத்தை தேசிய நூலக வாரியம் சனிக்கிழமை (ஜூன் 15) தொடங்கியது. 

தேசிய நூலக வாரியத்தின் ஆகப்பெரிய தகவல் அறிதிறன் திட்டம் எனும் அறிவிப்புடன் களம் கண்ட, தேசிய நூலக வாரியத்தின் இந்த ஆண்டிற்கான ‘S.U.R.E’ சமூக நிகழ்ச்சியை ஹார்ட்பீட்@பிடோக்கில் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் தொடக்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “பொதுநலனை இலக்காகக் கொண்டு இத்திட்டம் இடம்பெறவிருக்கிறது. மேலும், இது வழங்கும் கற்றல் வாய்ப்புகளைப் பெற்றிடும் வகையில் சிங்கப்பூரர்கள் உற்சாகமுடன் பங்கேற்க வேண்டும்,” என்று அழைப்பு விடுத்தார்.

தகவல் அறிதிறன்  வாயிலாக, ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பற்றி அறிதல், இணையத்தின் போலித்தன்மை, பொய்யான சித்திரிப்பு மோசடிகளை கண்டறிதல், அவற்றுக்கு இலக்காகாமல் பாதுகாத்துக்கொள்ளுதல் ஆகியவற்றை கற்றுக்கொள்வது குறித்த வாய்ப்புகளை இந்நிகழ்வு வழங்கவுள்ளது.

தேசிய நூலக வாரியமும் அதன் சமூகப் பங்காளிகளும் இணைந்து உருவாக்கியுள்ள தகவல் அறிவு சார்ந்த கல்வி வளங்களை அளித்தல், ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு தொடர்பான உள்ளடக்கத்தில் பொதுமக்கள் எவ்வளவு திறம்பட செயலாற்றுகின்றனர் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் வகையிலான இருவழி பங்கேற்பு புதிர்கள், உள்ளார்ந்த மின்னிலக்கம் குறித்த உரைகள், பயிலரங்குகள் என தகவல் அறிதிறன் தொடர்பான அம்சங்கள் நிகழ்வில் இடம்பிடித்துள்ளன.

பொதுமக்கள் பயன்படுத்தும் தகவல்கள் நம்பகமானவையா என்பதை உறுதிப்படுத்த உதவும்  தேசிய நூலக வாரியத்தின் S.U.R.E. அதாவது மூலம், புரிந்துகொள்ளுதல், மதிப்பீடு செய்தல், ஆய்வு செய்தல் எனும் படிநிலைகள் வழியாக பொதுமக்களுக்கு இணைய மோசடி, போலியான தகவல்கள் குறித்த விழிப்புணர்வை நல்குவது நிகழ்வின் முக்கிய நோக்கம் என்று சமூகத்தைச் சென்றடையும் திட்டங்கள், சேவைகள் பிரிவின் மேலாளரும் நூலகருமான மெர்வின் ஆங் விவரித்தார்.

“மின்னியல் உலகின் மேம்படுத்தப்பட்ட பலன்களைப் பெறுவதற்கு எப்படி திறம்பட ஆக்கமுறை  செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம் என்பதைப் பொதுமக்கள் கற்றுக்கொள்ள இது சிறந்த வாய்ப்பு.

“மேலும், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த பயிற்றுவிப்புகளை வழங்குவது தொடர்பான எங்கள் திட்டங்களைப் பரவலாக சமூகத்திடம் கொண்டுசேர்ப்பதே எங்கள் குறிக்கோள்,” என்று தமிழ் முரசிடம் அவர் கூறினார்.

2013ல் தொடங்கப்பட்ட தேசிய நூலகத்தின் ‘S.U.R.E. நிகழ்வு, இந்த ஆண்டு ஐந்து சமூக நடுவங்களில், 15க்கும் அதிகமான நூலகங்களில், இணையம் வாயிலாக ஏறத்தாழ 430,000 பேரைச் சென்றடைய நோக்கம் கொண்டுள்ளது.

இந்நிகழ்வு இந்த ஆண்டு அக்டோபர் இறுதி வரை நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுதேசிய நூலக வாரியம்நிகழ்வு