வரி கட்டாத, $20,000க்கு மேலான தொகையைத் தெரிவிக்காத 87 பயணிகள் பிடிபட்டனர்

2 mins read
a2a33095-e732-4626-962b-299794e77c45
சாங்கி விமான நிலையத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சாங்கி விமான நிலையத்தில், தெரிவிக்காமல் 20,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை வைத்திருந்த அல்லது சிகரெட்டுகள், மதுபானம் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி கட்டாத 87 பயணிகள் பிடிபட்டுள்ளனர்.

ஜூன் மாதம் பல்வேறு அமைப்புகள் ஒன்றுசேர்ந்து ஒரு வாரத்துக்கு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர். சோதனை இம்மாதம் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றது.

10,000க்கும் அதிகமான பயணிகள் அடையாளம் காணப்பட்டு சோதிக்கப்பட்டனர். சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் 18,000க்கும் அதிகமான பெட்டிகளும் விமானத்தில் கையில் கொண்டு செல்லப்படும் பைகளும் சோதிக்கப்பட்டதாக கூட்டறிக்கையின் மூலம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் காவல்துறை, குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சிங்கப்பூர் சுங்கத்துறை, தேசிய பூங்காக் கழகம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

சிங்கப்பூர் எல்லை தாண்டி ரொக்கம் தெரிவிக்கும் திட்ட (சிபிசிஆர்ஆர்) விதிமீறல்கள் உள்ளிட்ட எல்லை தாண்டிய சட்டவிரோதச் செயல்களை முறியடிக்க அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இது அடங்கும்.

ஜூன் 20ஆம் தேதிக்கும் 22ஆம் தேதிக்கும் இடையே 10 பேர் பிடிபட்டனர்; அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள் என்றும் எட்டு பேர் வெளிநாட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த 10 பயணிகளில் ஒன்பது பேர் ஆண்கள், ஒருவர் பெண். அவர்கள் 31லிருந்து 71 வயதுக்கு உட்பட்டவர்கள்.

அந்த 10 பேரில் இருவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது, அறுவருக்கு மொத்தமாக 23,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 140,000 வெள்ளிக்கு மேல் மதிப்புள்ள பல்வேறு நாட்டு நாணயங்களை சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்ற இதர இருவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

20,000 வெள்ளிக்கு மேல் மதிப்புள்ள ரொக்கம், காசோலை போன்றவற்றை தெரிவிக்காமல் சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்றால் குற்றவாளிக்கு 50,000 வெள்ளி அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தெரிவிக்கப்படாத தொகை பறிமுதலும் செய்யப்படலாம்.

குறிப்புச் சொற்கள்