சிங்கப்பூரையும் ஜோகூரையும் இணைக்கும் கடற்பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.
நூற்றாண்டு விழாவை ஜூன் 28ஆம் தேதி தேசிய மரபுடைமைக் கழகமும் தேசிய நூலக வாரியமும் உட்லண்ட்ஸ் குடிமை நிலையத்தில் கொண்டாடின.
தேசிய மரபுடைமைக் கழகம்,’ தி காஸ்வே: ஒரு நூற்றாண்டின் இணைப்புகள்’ என்ற புதிய கண்காட்சியைத் தொடங்கியுள்ளது.
தேசிய நூலக வாரியம், சிறப்பாகத் தெரிவு செய்யப்பட்ட படைப்புகளை உள்ளடக்கிய இணையத்தளத்தை அமைத்திருப்பதுடன் சிறப்புரைத் தொடர் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறது.
இரு நாடுகளின் பாரம்பரியத்தையும் வாழ்க்கைக் கதைகளையும் வெளிப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த சமூக, கலாசார, இளையர்துறை அமைச்சரும், சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், “இன்று, இந்த உலகின் பரபரப்பான நில எல்லைக் கடப்புகளில் கடற்பாலம் ஒரு கடப்பு மட்டுமல்ல. இது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் பாரம்பரியத்தை வலியுறுத்தும் பகுதியாக மாறியுள்ளது.
“வாகனங்களுக்கான ஒரு பாதைக்கு அப்பால், உறவு மற்றும் நட்புறவை நோக்கிய பாதையை, இந்தப் பாதை நமக்கு வழங்கியுள்ளது. இந்த வளர்ச்சி அனைத்து ஆண்டுகளிலும் நம்மை இணைக்கும் ஒரு முக்கிய இணைப்பாக உள்ளது,” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு ஜோகூர் மாநில முதலமைச்சர் ஓன் ஹாஃபிஸ் காஸியும் வருகை தந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய மரபுடைமைக் கழகத்தின் கல்வி, சமூக நலன் இயக்குனர் ஜெரால்டு வீ, “கடந்த நூற்றாண்டில், கடற்பாலம் சிங்கப்பூர், மலேசியா மக்களின் வாழ்க்கையோடு இணைந்து ஒரு பெரும் பங்காக வகித்துள்ளது.
“இந்தக் கண்காட்சி, 20, 21ஆம் நூற்றாண்டுகளின் முற்பகுதியில் கடற்பாலத்தின் பரிணாம வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் கதைகளில் சிலவற்றை வெளிக்கொண்டுவர, ஒரு தளமாக அமைந்துள்ளது,” என்று தெரிவித்தார்.
இக்கண்காட்சி பங்கேற்பாளர்களை வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும்.
இக்கண்காட்சி ஜூன் 28 முதல் உட்லண்ட்ஸ் குடிமை நிலையத்தில் நடைபெறுகிறது. பிறகு, செப்டம்பரில் சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு மாற்றப்படும்.
தேசிய நூலக வாரியமும், புதிய இணையத்தளம் ஒன்றை அமைத்துள்ளது. இணையம்வழி பார்வையாளர்கள் கடற்பாலம் தொடர்பான பதிவுகளையும் புகைப்படங்களையும் வரலாற்று நேர்காணல்களையும் கண்டும் கேட்டும் ரசிக்கலாம்.
1924ஆம் ஆண்டு, ஜூன் 28ஆம் தேதி தென்கிழக்காசியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் ஆளுநராக இருந்த சர் லாரன்ஸ் கில்லிமார்ட், ஜோகூர் சுல்தான் இப்ராகிம் ஆகியோரால் கடற்பாலம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

