தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நூலகத்திற்கும் சமூகத்திற்கும் இடையே பிணைப்பை வலுப்படுத்த புதிய திட்டம் தொடக்கம்

3 mins read
10d7c3f4-acd7-4f3b-9bdf-eccba5b92df3
சிராங்கூன் பொது நூலகத்தில், வாசகர்களுக்கு மேம்பட்ட வாசிப்பு அனுபவத்தை அளிக்கும் நோக்கில் மறுவடிவமைக்கப்பட்ட வாசிப்பு இடம். - படம்: தேசிய நூலக வாரியம் 

நூலகங்களில் இருக்கும் இடவசதிகளை வாசகர்களுக்குப் புத்துணர்ச்சிமிக்க, புதுமைமிக்க இடமாக மாற்றும் இலக்கோடு வடிவமைக்கப்பட்டுள்ள ‘கம்யூனிட்டி டேக்ஓவர்’ எனும் தேசிய நூலக வாரியத்தின் (என்எல்பி) புதிய திட்டம் ஜூன் 28ஆம் தேதி துவக்கம் கண்டது.

வாசிப்பதற்கான ஓர் இடமாக மட்டும் அல்லாமல், மக்கள் சமூகமாக இணைந்து செயல்படவும், வலுவான சமூகப் பிணைப்புகளை ஏற்படுத்திடவும் வாய்ப்பை நல்கும் இடங்களாக நூலகங்களை அமைத்துக் கொடுப்பது இந்த திட்டத்தின் நோக்கம். 

இம்முறை எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் வாயிலாக, தேசிய நூலக வாரியத்துடன் மூன்று உள்ளூர் அறைக்கலன் தயாரிப்பு நிறுவனங்கள் கரம்கோர்த்துள்ளன. 

‘ஃபோர்ட்டிடூ’ (FortyTwo), ‘ஹோம்ஸ்டூலைஃப்’ (HomestoLife), ‘இப்ஸே  இப்ஸா  இப்சம்’ (ipse ipsa ipsum) ஆகிய அந்த மூன்று நிறுவனங்களும், உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட அறைக்கலன்களைக் கொண்டு நூலகங்களுக்குச் செல்லும் வாசகர்கள் அமர்ந்து படிக்கும் வாசிப்பு அறைகளுக்கான மெதுநாற்காலிகள், நீள்சாய்வு இருக்கைகள் உள்ளிட்ட அறைக்கலன்களை வடிவமைத்து வழங்கியுள்ளன.

இந்த அறைக்கலன்களைக் கொண்டு மறுவடிவமைக்கப்பட்ட வாசிப்பு இடங்களை ஜூரோங் வெஸ்ட் பொது நூலகம், சிராங்கூன் பொது நூலகம், மத்தியப் பொது நூலகம்  ஆகியவற்றில் பொதுமக்கள் பார்க்கலாம்.

“நூலகங்களில் இருக்கும் பொது இடங்களை அவர்கள் வாசிப்பதற்குப் பொருத்தமான இடங்களாக, வாசகர்களுக்குப் புத்துயிர் தரும் இடமாக மாற்றும் வகையில் இம்முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்.  

மேலும் இந்த ஆண்டு புதிய நிகழ்வாக சமூகப் பங்களிப்புச் சார்ந்த ‘கம்யூனிட்டி டேக்ஓவர்” திட்டத்தில் தேசிய நூலக வாரியத்துடனும், இதரப் பங்காளிகளுடனும் உள்ளூர்த் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது ஒரு நல்ல முயற்சி,” என்று தமிழ் முரசிடம் கூறினார், ‘என்எல்பி’ திட்டமிடுதல், மேம்பாட்டுப் பிரிவின் மேலாளர் லாவண்யா கிருஷ்ணமூர்த்தி.

“நூலகங்களுக்கு அதிகளவிலான மாணவர்களும் மூத்தோரும் செல்கின்றனர். அங்கு அதிக நேரத்தையும் செலவிடுகின்றனர். அப்போது சமூகத்திற்கும் நூலகத்திற்கும் இடையிலான பிணைப்புகளை உருவாக்கிட இந்தப் புதிய முயற்சி வழிவகுக்கும்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“மேலும் இதன் மூலமாக அறைக்கலன்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் உள்ளூர்த் தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் படைப்புகள், பின்னணியில் இருக்கும் கதைகள் ஆகியவை குறித்தும்  வாசகர்கள் தெரிந்துகொள்ளலாம். நூலகங்களில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இடங்களுக்குப் பொதுமக்கள் செல்வதை ஊக்கப்படுத்துவதும் எங்கள் நோக்கம்,” என்றும் லாவண்யா தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த ஆண்டு மேற்கூறிய நிகழச்சியுடன் உடன்நிகழ்வாக ‘நூல்களுக்காக வாசிப்போம்’ எனும் வருடாந்திர நூல் நன்கொடை திரட்டும் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வாசிப்பு இயக்கத்தின் ஓர் அங்கமான ‘நூல்களுக்காக வாசிப்போம்’ நிகழ்வு இந்த ஆண்டு ஜூலை 1 தொடங்கி ஜூலை 31 வரை நடைபெறும்.

“இது நீக்குப்போக்கான திட்டம். வாசகர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் குழுவாகவோ, தனிநபராகவோ, அமைப்பாகவோ “நூல்களுக்காக வாசிப்போம்” நிகழ்வில் பங்கேற்க இயலும்.

“இந்தக் காலகட்டத்தில் நேரடியாக நூலகத்திற்குச் சென்றாலோ இணையம் வழியாகவோ  ஒவ்வொரு பத்து பங்கேற்பாளர்களும் பதினைந்து நிமிடங்களுக்கு நூல்களை வாசிக்கையில், அதற்கு ஈடாக ‘என்எல்பி’யின் நூல் நன்கொடையாளர்கள் வழங்கும் நூல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்,” என்று தமிழ் முரசிடம் விவரித்தார் ‘என்எல்பி’  தொகுப்புத் திட்டமிடல், மேம்பாட்டுப் பிரிவு நூலகர் ஜமுனா.

இந்தத் திட்டத்தின் வழி வசதி குறைந்தோர் நூல்களை வாசிக்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். இம்முறை ‘கம்யூனிட்டி டேக்ஓவர்’ நிகழ்ச்சியுடன் ‘நூல்களுக்காக வாசிப்போம்’ நிகழ்ச்சியும் நடைபெறும்போது இன்னும் அதிகமானோர் வந்து, இந்த நூல் நிதி திரட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் ஜமுனா.

கூடுதல் விவரங்களை அறிய ‘என்எல்பி’-யின் இணையத்தளம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிடலாம்.

குறிப்புச் சொற்கள்