மாற்றத்தை ஏற்படுத்த ஆரவாரம் தேவையில்லை என்றும் ஆக்ககரமான, அர்த்தமுள்ள செய்திகளை இணையத்தில் பகிர்ந்தாலே போதும் என்றும் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் நேர்மறையான வழியில் தாக்கத்தை ஏற்படுத்தவும் அதனை மேலும் வலுப்படுத்தவும் கூடிய முயற்சிகளைச் செய்து முடிப்பதற்கும் இளையர்களால் முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜுன் 30ஆம் தேதி நடைபெற்ற ‘தெமாசெக் அறநிறுவனம் மற்றும் ரோசஸ் ஆஃப் பீஸ் நல்லிணக்க வல்லுநர்கள் நிகழ்வு 2024’ல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் அவர்.
‘நல்லிணக்க வல்லுநர்கள் 2024’ நியமன நிகழ்வினையொட்டி நடைபெற்ற நல்லிணக்கக் கலந்துரையாடலில் தொடர்ந்து உரையாற்றிய தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான், “சமூகத்தில் எழும் எந்தவொரு பிரிவினையும் நம் சமூகப் பிணைப்பை அச்சுறுத்தக்கூடும். எனவே, பல இனங்களும் நம்பிக்கைகளும் கொண்ட ஒரே தேசமாக நாம் ஒற்றுமையுடன் திகழ்வது முக்கியம்,” என்று வலியுறுத்தினார்.
“சவால்கள், சிக்கல்களுக்கிடையே அரசு முன்னெடுக்கும் முயற்சிகளை மட்டும் சார்ந்து இருத்தல் போதாது. சவால்களை ஆற்றல்மிக்க வகையில் சந்திக்கும் பொருட்டு, பலவிதமான, நிலைமைக்குத் தகுந்த அணுகுமுறைகள் அவசியம்,” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், இத்தகைய சூழல்களில் ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ போன்ற அமைப்புகளின் பங்கு முக்கியமானது என்று சுட்டிய அமைச்சர் டான், “ஏனெனில் வெவ்வேறு நம்பிக்கைகள், அவற்றிற்கு இடையேயான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் வெளிப்படையான கலந்துரையாடல்களில் நாம் ஈடுபடுவதற்கான பாதுகாப்பான இடங்களை இந்த அமைப்புகள் உருவாக்கும்,” என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டிற்கான நல்லிணக்க வல்லுநர்களின் நியமனம் சரியான திசையை நோக்கிச் செல்லும் முக்கியமான ஒரு படி என்று சொன்ன அமைச்சர், இளையர்களையும் இளையோருக்கான தலைவர்களையும் அமைதியின் ஆதரவாளர்களாகத் திகழ அழைப்பு விடுத்தார்.
12 உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த 61 சிங்கப்பூர் இளையர்கள் நல்லிணக்க வல்லுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களுள் சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி குமார் தேவதர்ஷினியும் ஒருவர். 21 வயதாகும் இவர், “பல்லின சமூகத்தில் எந்தவொரு வேறுபாட்டையும் கருதாமல் ஒற்றுமையாக வாழ எந்த அளவுக்குக் கற்பிக்கிறோமோ அந்த அளவுக்கு நிறைவான பலன் கிட்டும். அதன் அடிப்படையில் தேசத்தில் அமைதி, ஒற்றுமை, உதவும் மனப்பான்மை உள்ளிட்ட நல்லிணக்கப் பண்புகளைப் பேணி வளர்க்கும் முக்கியச் சமூக பொறுப்பு, இந்த நியமனம்,” என்று தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

