ஐரோப்பா, மின்னிலக்க அம்சங்கள் அனைத்திலும் சிங்கப்பூருடன் மேலும் ஒத்துழைக்க விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் ஆய்வு, தொழில்நுட்ப விநியோகச் சங்கிலி, செயற்கை நுண்ணறிவு சட்ட திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்களில் சிங்கப்பூருடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த ஐரோப்பா எண்ணம் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் மார்கரீத் வெஸ்டாகர் வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 5) அவ்வாறு கூறினார்.
‘மின்னிலக்க யுகத்துக்கு தயாராய் இருக்கும் ஐரோப்பா’ எனும் திட்டத்தின் அரசியல் ரீதியான முக்கிய அம்சங்களைச் செயல்படுத்தும் பணிகளை வழிநடத்தும் ஐரோப்பிய குழுவின் நிர்வாக இணைத் தலைவரான அவர், சிங்கப்பூருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.
“ஆய்வு, புத்தாக்கம் ஆகியவற்றுக்கான மிக முக்கியமான இடமாக சிங்கப்பூர் விளங்குகிறது. பகுதி மின்கடத்தி, செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை உள்ளடக்கும் கட்டமைப்பில் உள்ள எல்லா அம்சங்களும் எங்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றில் சிங்கப்பூர் மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது,” என்று தமது மூன்று நாள் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். தொழில்நுட்பத்தில் சிங்கப்பூருடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அவர் பயணம் மேற்கொண்டார்.
பகுதி மின்கடத்தி விநியோகச் சங்கிலியை வலுவாக வைத்திருப்பத்தில் சிங்கப்பூருடன் இணைந்து ஆராய விருப்பம் கொண்டுள்ளதாக திருவாட்டி வெஸ்டாகர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, உயர்தர மின்தகடுகள், மின்தகடுகளை உற்பத்தி செய்வதற்கான கருவிகள் ஆகியவற்றை சீனா பெறாமல் இருக்கக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அப்படியிருக்கையில் சீனாவில் உற்பத்தியாகும் மின்தகடுகளை சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள உலக நாடுகள் ஆலோசித்து வருகின்றன.
திருவாட்டி வெஸ்டாகர், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டைச் சந்தித்தார். ஆய்வு, புத்தாக்கம் ஆகியவற்றில் ஐரோப்பாவும் சிங்கப்பூரும் இணைந்து செயல்படுவது குறித்து இருவரும் கலந்துபேசினர்.
தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோவையும் திருவாட்டி வெஸ்டாகர் சந்தித்தார். திருவாட்டி டியோ, இணையப் பாதுகாப்பு, சிங்கப்பூரின் அறிவார்ந்த நகரத் திட்டம் ஆகியவற்றை வழிநடத்துகிறார்.


