கிளமென்டி விளையாட்டரங்கம், மறுவடிவம் காணவுள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் அது புதுப்பிக்கப்படவுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார். தற்போது காலியிடமாக இருக்கும், வெஸ்ட் கோஸ்ட் பொழுதுபோக்கு நிலையம் அமைந்திருந்த பகுதியுடன் சேர்ந்து கிளமென்டி விளையாட்டரங்கமும் புதுப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
2030ஆம் ஆண்டுக்குள் கிளமென்டி விளையாட்டரங்கத்தைப் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அரங்கில் சாஃப்ட்பால், பேஸ்பால் ஆகிய விளையாட்டுகளுக்கான திடல்கள் இருக்கும். மேலும், ஓட்டப்பந்தயத் திடலும் அமைக்கப்படும்.
பொதுமக்கள் விளையாட்டுகளைக் கற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் புதுப்பிக்கப்பட்ட கிளமென்டி விளையாட்டரங்கில் இடம்பெறும் என்று சனிக்கிழமையன்று (ஜூலை 6) திரு லீ தெரிவித்தார்.
வெஸ்ட் கோஸ்ட் ரோடு, அயர் ராஜா விரைவுச்சாலை ஆகியவற்றுககு நடுவே உள்ள இடத்தில் கிளமென்டி விளையாட்டரங்கமும் முன்பு வெஸ்ட் கோஸ்ட் பொழுதுபோக்கு நிலையம் அமைந்திருந்த பகுதியும் அருகருகே உள்ளன. வெஸ்ட் கோஸ்ட் பொழுதுபோக்கு நிலையம் 2020ஆம் ஆண்டு தகர்க்கப்பட்டது.
கிளமென்டி விளையாட்டரங்கைப் போல் பழைமை வாய்ந்த இயோ சூ காங், பிடோக் விளையாட்டரங்குகளைப் புதுப்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
கிளமென்டி விளையாட்டரங்கம் அமைந்துள்ள வட்டாரத்தில் புதிய வெஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் நிலையம் அமையவுள்ளது. அதனுடன் சேர்ந்து பல்வேறு அம்சங்களை ஒன்றுசேர்க்கும் கட்டடத்தைக் கட்டுவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு லீ சொன்னார்.
இவ்வாண்டின் பேஷன்ஆர்ட்ஸ் விழாவின் முதல் நிகழ்ச்சியில் அவர் பேசினார். பேஷன்ஆர்ட்ஸ் விழா, ஆண்டுதோறும் மக்கள் கழகம் ஏற்பாடு செய்துவரும் சமூக நிகழ்ச்சிகளைக் கொண்ட நிகழ்வாகும்.
தொடர்புடைய செய்திகள்
வெஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் நிலையத்தை 2032ஆம் ஆண்டு திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்பு தங்ளின் உயர்நிலைப் பள்ளி இருந்த இடத்தில் அது கட்டப்படுகிறது.
வெஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் நிலையம், முற்றிலும் நிலத்துக்கு அடியில் அமைந்திருக்கும். மத்திய நீர் சேகரிப்புப் பகுதிவழி ஜூரோங்கையும் சாங்கியையும் இணைக்கும் அந்த ரயில் பாதையில் மற்ற நிலையங்களும் நிலத்தடியில் அமைந்திருக்கும்.

