சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் முதல் முறையாக தொண்டூழிய விழா நடக்கிறது.
தொண்டூழியர்களை கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த விழாவுக்கு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
குடியிருப்புப் பகுதிகளில் தொண்டூழிய விழா நடக்கும் ஜூலை மாதத்தின் நான்கு வார இறுதிகளில் அவை இடம்பெறும்.
சமூக சேவை அமைப்புகள் குடியிருப்புப் பகுதிகளில் முகாம்கள் அமைத்து தொண்டூழியம் தொடர்பான வாய்ப்புகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும்.
மேலும், விதவிதமான பின்னணியில் இருந்து வரும் தொண்டூழியர்கள் அவர்களது அமைப்பு குறித்தும் அவர்களது தொண்டூழிய அனுபவம் பற்றியும் மக்களிடம் சொல்வார்கள்.
ஒவ்வொரு வார இறுதியும் ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டிருக்கும். அது வட்டாரத்திற்கு ஏற்றவாறு மாறி இருக்கும். ஒவ்வொரு வட்டாரத்திற்கான தேவைகள் வித்தியாசமாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை என்று தெரிவிக்கப்பட்டது.
உடற்குறை உள்ளவர்களுக்குத் துணைபுரியும் விதமாக ஜூலை 6, 7ஆம் தேதிகளில் ‘நமது தெம்பனிஸ் நடுவத்தில்’ நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
குடும்ப உறவுகளை வலுப்படுத்த தோ பாயோ நடுவத்தில் ஜூலை 13, 14ஆம் தேதிகளில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவும் விதமாக கம்போங் @அட்மிரல்ட்டியில் ஜூலை 20, 21ஆம் தேதிகளில் தொண்டூழிய முகாம்கள் நடக்கும்.
ஆபத்தில் உள்ள இளையர்களை மீட்க ‘லாட் ஒன் ஷாப்பர்ஸ்’ கடைத்தொகுதியில் ஜூலை 27, 28ஆம் தேதிகளில் தொண்டூழிய நடவடிக்கைகள் இடம்பெறும்.
கிட்டத்தட்ட 10 சமூக சேவை அமைப்புகள் இந்தத் தொண்டூழிய விழாவில் கலந்துகொண்டுள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்தார். இதில் பெரும்பாலான அமைப்புகள் அர்ப்பணிப்பான தொண்டூழிய நிர்வாகிகளைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தொண்டூழியம் தரும் மகிழ்ச்சி
தொண்டூழியத்தின்மீது ஏற்பட்ட ஆர்வத்தால் 54 வயது அசியா சலீம், தொண்டூழிய நன்னடத்தைக்காலக் கண்காணிப்பு அதிகாரியாக உதவி செய்யத் தொடங்கினார்.
நன்னடத்தைக் கண்காணிப்புத் தண்டனை விதிக்கப்பட்ட இளம் குற்றவாளிகளின் வாழ்க்கையைச் சீரமைக்கும் பணியாக இதைக் கருதினார் திருவாட்டி அசியா.
15 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் தொண்டூழியப் பயணத்தில் இருப்பது தமக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக அவர் கூறினார்.
முழுநேர சந்தைப்படுத்துதல் நிர்வாகியாக உள்ள திருவாட்டி அசியா, தவறான பாதையில் சென்றவர்களை மீண்டும் நல்வழியில் பயணம் செய்ய வைப்பது கொடுக்கும் மகிழ்ச்சி அளவற்றது என்றும் கூறினார்.
திருவாட்டி அசியா போல் தொண்டூழிய விழாவில் பல தொண்டூழியர்கள் தங்களது அனுபவங்களைப் பற்றி பகிர உள்ளனர்.

