ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ளார்ந்த நகரமயமாதலை வழிநடத்திச் செல்லும் முக்கிய நகர்களுக்கான பட்டியலில் சிங்கப்பூர் இடம்பிடித்துள்ளது. இப்பட்டியலில் மெல்பர்ன், வெலிங்டன் இரு நகர்களும் இணைந்துள்ளன.
ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கான உள்ளார்ந்த நகர்கள் எனும் மதிப்பீட்டு அறிக்கையை அண்மையில் முதன்முதலாக வெளியிட்டது குஷ்மன் அண்ட் வேக்ஃபீல்ட் நிறுவனம் (சி & டபிள்யூ).
பொருளியல், சமூகம், கட்டமைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் 35 நகர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து மேற்கூறிய அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, ‘வாழ்வதற்கு உகந்த சூழலை வழங்குவதால் வலுவான உள்ளார்ந்த கட்டமைப்புச் செயல்திறன்மிக்க நகர்’ என சிங்கப்பூரைக் குறிப்பிட்டுள்ளது ‘சி & டபிள்யு’.
“குறைந்த குற்றவியல் விகிதம், தலைசிறந்த பொதுப் போக்குவரத்து முறை, நற்பெயருடன் முக்கியப் பொருளியல் மையமாக வட்டாரத் தொடர்புகளைக் கொண்ட நகராக சிங்கப்பூர் திகழ்கிறது.
“இதனால் சிறந்த திறனாளர்களை ஈர்த்து புத்தாக்கங்களைப் பேணுகிறது,” என்று சிங்கப்பூர் குறித்த மதிப்பீடுகளை விவரித்தது அந்த அறிக்கை.
வலுவான ஊழியரணி பங்கேற்புடன், ‘பாதிக்கப்படக்கூடிய வேலைவாய்ப்பு’ எனும் பிரிவில் குறைந்த அளவிலான மக்கள் இருப்பதன் காரணமாக, அனைவரையும் உள்ளடக்கிய பொருளியல் எனும் அம்சத்திலும் சிங்கப்பூர் அதிக மதிப்பெண்கள் பெற்று பட்டியலில் முன்னணி வகிக்கிறது.
அறிக்கையில் பட்டியலிடப்பட்டிருக்கும் முடிவுகள் குறித்து தமிழ் முரசிடம் பேசிய நிதி ஆலோசகர் ம.சசிகுமார், 30, அறிக்கையில் கூறப்பட்டிருப்பதைப்போல ஆசிய பசிபிக்கில் உள்ளார்ந்த நகரமயமாதலை வழிநடத்திச் செல்லும் முக்கிய நகர்களுக்கான பட்டியலில் சிங்கப்பூர் முன்னிலை வகிப்பது மிகவும் பொருத்தமானது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“நம் அரசியல் தலைவர்கள், அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேணுவதில் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனர். வட்டாரத்திலும் உலக அளவிலும் போட்டித்தன்மைமிக்க நகராக இருப்பதை உறுதிசெய்ய, தன்னால் இயன்ற எல்லா முயற்சிகளையும் சிங்கப்பூர் மேற்கொண்டு வருகிறது.
“மேலும், உயர்ந்து வரும் சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு, நாம் தொடர்ச்சியாக வலிமை வாய்ந்த பொருளியல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம் என்பதைப் பிரதிபலிக்கிறது. இதன் அடிப்படையில் சிங்கப்பூரின் செயல்பாடு வெற்றிகரமாகத் திகழ்கிறது,” எனத் திரு சசிகுமார் விவரித்தார்.
“சிறிய நாடாக இருந்தாலும், சிங்கப்பூருடன் வர்த்தக உறவுகள் கொண்டுள்ள இதர நாடுகளுக்கு பெருநலன் மிக்க வர்த்தக வழிகளைத் தருவதில் சிங்கப்பூர் கொண்டுள்ள கடல் சார்ந்த வர்த்தகக் கட்டமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
“முதலீட்டாளர்களுக்கு உகந்த வணிகச் சூழல், திறன்மிக்கக் கொள்கைகள் எனத் தன்னை மேம்பட்ட முறையில் சிங்கப்பூர் நிலைநிறுத்தி வருகிறது,” என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, இந்த அறிக்கை குறித்து கருத்துரைத்த குஷ்மன் அண்ட் வேக்ஃபீல்ட் சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நெட்டலி கிரேக், “சிங்கப்பூரின் சிறப்பான செயல்திறன், பல்வேறு சமூக-பொருளாதாரக் குறியீடுகளைச் சீராக வசப்படுத்திடும் வகையில் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பிலிருந்து உருவாகிறது,” எனக் கூறினார்.
“தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், அறிவார்ந்த நகர் எனும் அந்தஸ்தை உறுதிப்படுத்துவது, புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மைக்கான முன்னுரிமை வழங்கும் பசுமை முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றில் அபிவிருத்தி அடைந்து சிங்கப்பூர் முன்னோக்கிச் சென்றுகொண்டிருப்பது, உள்ளார்ந்த நகராகத் திகழ்வதற்கு ஏதுவாக சிங்கப்பூர் கொண்டுள்ள தணியாத நாட்டத்தின் ஆதாரம்,” என மேலும் குறிப்பிட்டார் திருவாட்டி கிரேக்.

