ஜூரோங் வெஸ்ட்டில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 9) ஏற்பட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
புளோக் 448 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 42 இல் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்துத் தங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
மேலும், தீச்சம்பவம் நடந்த வீட்டில் உள்ள படுக்கையறையில் ஒருவர் சிக்கிக்கொண்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட புளோக்கில் வசித்த கிட்டத்தட்ட 10 குடியிருப்பாளர்களை காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் வெளியேற்றின.
சம்பவ இடத்திற்குச் சென்றபோது முதல் மாடியில் உள்ள வீடு ஒன்றின் வசிப்பறை தீப்பிடித்து எரிந்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு ஒன்று வசிப்பறையில் இருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மற்றொரு குழு மின்சாரத்தால் இயக்கப்படும் ரம்பத்தைப் பயன்படுத்தி வீட்டின் பின்பகுதியில் இருக்கும் சன்னலை உடைத்து, பாதிக்கப்பட்ட நபரை மீட்டது.
பீஷான் தீயணைப்பு நிலையம், ஜூரோங் தீயணைப்பு நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்ததாகவும் கூறப்பட்டது.
மீட்கப்பட்ட நபரும் அண்டை வீட்டில் வசித்த இருவரும் புகையை சுவாசித்ததால் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தீச்சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.