தீவு விரைவுச்சாலையில் 24 மணிநேரத்துக்குள் நிகழ்ந்த இரு வாகன விபத்துகளில் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் மாண்டார்.
அவ்விபத்துகளில் சிக்கிய வேறொருவர் நினைவிழந்த நிலைக்குச் சென்றார்.
சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலைப் பகுதியிலும் தீவு விரைவுச்சாலையை பிடோக் நார்த் அவென்யூ மூன்றுடன் இணைக்கும் சாலையிலும் நிகழ்ந்த விபத்துகள் குறித்து வியாழக்கிழமை (ஜூலை 11) அதிகாலை 4.55 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன. மோட்டார்சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.
அந்த விபத்து நிகழ்ந்த பிறகு சம்பவ இடம் காணொளியில் பதிவுசெய்யப்பட்டருந்தது. அந்தக் காணொளி Singapore roads accident.com ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
பெருஞ்சேதத்துக்கு உள்ளான ஒரு மோட்டார்சைக்கிளும் நீல நிறக் கூடாரம், சிதைவுகள் ஆகியவையும் அந்தக் காணொளியில் காணப்பட்டன. பின்னணியில் மூன்று காவல்துறை கார்கள், ஒரு காவல்துறை வேன், இரண்டு காவல்துறை மோட்டார்சைக்கிள்கள், ஓர் அவசர மருத்துவ உதவி வாகனம் ஆகியவையும் காணொளியில் தெரிந்தன.
தீவு விரைவுச்சாலையில் புதன்கிழமை (ஜூலை 10) பிற்பகல் நிகழ்ந்த மற்றொரு விபத்தில் வேறொரு மோட்டார்சைக்கிளோட்டி சிக்கினார். அந்த 37 வயது பெண், நினைவிழந்த நிலையில் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
துவாசை நோக்கிய தீவு விரைவுச்சாலையை கிளமெண்டி அவென்யூ ஆறுடன் இணைக்கும் சாலைக்குப் பிறகு வரும் பகுதியில் நிகழ்ந்த அவ்விபத்து குறித்து பிற்பகல் 12.50 மணிக்குத் தகவல் வற்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
2023ஆம் ஆண்டு நிகழ்ந்த அனைத்து போக்குவரத்து விபத்துகளில் பாதிக்கும் மேலானவற்றில் மோட்டார்சைக்கிளோட்டிகளும் அவர்களுடன் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தோரும் சம்பந்தப்பட்டிருந்ததாகக் காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரின் மொத்த வாகன எண்ணிக்கையில் 15 விழுக்காட்டுக்கும் குறைவானவையே மோட்டார்சைக்கிள்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு மொத்தமாக 4,290 மோட்டார் சைக்கிளோட்டிகளும் அவர்களுடன் பயணம் செய்தோரும் விபத்துகளில் காயமுற்றனர். அப்படியென்றால் தினந்தோறும் சராசரியாக 12 பேர் மோட்டார்சைக்கிள் விபத்துகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அர்த்தமாகும்.