சிங்கப்பூரில் பொறியியல் துறையில் திறமைகளை வளர்க்க மாணவர்களுக்குப் புதிய உபகாரச் சம்பளத்தைச் சிங்கப்பூர் பொறியாளர்கள் கழகம் ஜூலை 13ஆம் தேதி அறிவித்தது.
பல்வேறு நிதி திரட்டு நிகழ்வுகள் மூலம் கிட்டத்தட்ட $210,000 திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் பொறியியல் படிப்புகளைப் பயில விரும்பும் தகுதியான மற்றும் நிதி உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளமாக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் கழகம் தெரிவித்தது.
முதற்கட்டமாக, ஆண்டுக்கு ஒருங்கிணைந்த மதிப்பில் $38,000 ஆறு உபகாரச் சம்பளங்களாக வழங்கப்படும் எனக் கழகம் கூறியது.
இதில், பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் இரு மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் பயிலும் இரு மாணவர்கள், தொழில்நுட்பக் கல்விக் கழகத்திற்குச் செல்லும் இரு மாணவர்கள் அடங்குவர்.
இந்த உபகாரச் சம்பளம் எந்தவொரு பத்திரமும் இல்லாமல், ஒரே தவணையாக வழங்கப்படும்.
தேசிய பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் ஜூலை 13ஆம் தேதி நடந்த இந்த உபகாரச் சம்பளத் தொடக்க விழாவில் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கலந்துகொண்டார்.
போக்குவரத்து போன்ற முக்கியச் சேவைகளை வழங்குவதில் பொறியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என அந்த நிகழ்ச்சியில் திரு சீ வலியுறுத்தினார்.
மேலும் சிங்கப்பூரின் வளர்ச்சியை ஆதரிப்பதற்குப் பொறியியல் கண்டுபிடிப்புகள் எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இளம் பொறியியல் மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பொறியியலில் தங்கள் ஆர்வத்தைத் தொடர்வார்கள் எனத் தான் நம்புகிறேன் என்றும் திரு சீ தெரிவித்தார்.
மேலும், “இந்தத் துறையில் உள்ள வரம்பற்ற சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பதற்கும் ஆராய்வதற்கும் உங்களுக்கு நீங்களே சவால்விட்டுக் கொள்ளுங்கள்,” என்றும் அவர் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

