இன நல்லிணக்க நாளை முன்னிட்டு ஜூலை 19ஆம் தேதியன்று சிங்கப்பூர் முழுவதும் உள்ள பள்ளிகளிலும் தொடக்கக் கல்லூரிகளிலும் ‘சிங்கப்பூர்: நமது பன்முக கலாசார வண்ணத்தளம்’ (Singapore: Our Multicultural Mosaic) என்ற கருப்பொருளையொட்டி பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறின.
அவ்வகையில், செயின்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரியின் இன நல்லிணக்க நாள் கொண்டாட்டத்தில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கலந்துகொண்டார்.
அங்கு இன நல்லிணக்கம், பன்முகக் கலாசாரம், சமூக ஒற்றுமை முதலிய தலைப்புகளையொட்டி மாணவர்களிடையே ஆழமான புரிதலை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தொடக்கக்கல்லூரி முதலாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் சிலர், ஆசிரியர்களின் ஆலோசனையோடு நற்பண்பு குடியியல் கல்விப் பாடம் ஒன்றை தயாரித்தனர். மேலும், அதுபற்றி சக மாணவர்களுடன் கலந்துரையாடியபோது அமைச்சர் சானும் அதில் பங்கேற்றார்.
இன நல்லிணக்கத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவும் விவாதிக்கவும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு அந்தக் குழுக் கலந்துரையாடல் நடைபெற்றது.
மற்ற இனத்தவரின் கலாசார ஆடையை அணிந்த அனுபவங்கள், பிற கலாசாரங்களையும் ஏற்றுக்கொண்டு, அவற்றைப் போற்றுவது குறித்த தங்களின் எண்ணங்களை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
பொது இடங்களில் தற்செயலாக வெளிப்படும் இனவெறியைத் தடுப்பதற்குச் சரியான கல்வி அவசியம் என்று மாணவர்கள் கூறினர்.
மேலும், மற்ற இனத்தவரின் பண்டிகைகளைக் கொண்டாடுவது பற்றியும், அத்தகைய பங்களிப்பு எவ்வாறு புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துகிறது என்பதை பற்றியும் மாணவர்கள் கலந்துரையாடினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நடவடிக்கையின் இறுதியில் உரையாற்றிய அமைச்சர் சான், “சிங்கப்பூரில், நமது சொந்த கலாசாரங்களில் ஆழமாக வேரூன்றி இருக்கிறோம். அவ்வாறு செய்வதோடு, அனைவருக்கும் பொதுவான ஓர் எதிர்காலத்தையும் உருவாக்க நினைக்கிறோம்.
“மாணவர்களாகிய நீங்கள், வேறுபாடுகளை மறந்து, பன்முகத்தன்மையைப் போற்றி அனைவரையும் உள்ளடக்கிய புதிய எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.
கலந்துரையாடலில் பங்கேற்ற தொடக்கக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவரான கிருஷ்ணா குகணேஷ், 20, அதனைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“கலந்துரையாடலைப் புதுமையாக வடிவமைத்திருந்தது ஆழ்ந்த சிந்தனைக்கு வழிவகுத்தது. வழக்கமாக, எங்கள் அன்றாட உரையாடல்களில் இன நல்லிணக்கம் பற்றி நாங்கள் பேச வாய்ப்பு அமையாததால் இதுபோன்ற கட்டமைக்கப்பட்ட கலந்துரையாடல் நேரம் இருந்தது எல்லாருக்கும் இடையே ஒரு புரிதலை வளர்த்துகொள்வதற்கான அடித்தளத்தை வழங்கியது. அமைச்சரின் வருகையும் அவரின் கருத்துகளும் இன நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை மேலும் எடுத்துரைத்தன,” என்றார் அவர்.
செயின்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரியின் நற்பண்பு குடியியல் கல்விப் பிரிவின் தலைவரான சசிகுமார் ஜெய்சந்திரா, 39, தமது வகுப்பறையில் பல இன, சமயங்களைச் சேர்ந்த மாணவர்கள் இருப்பதை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களின் கலாசாரங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ளும் பல நடவடிக்கைகள் இடம்பெறச் செய்வதாகக் சொன்னார்.
“சிங்கப்பூரில் இன நல்லிணக்கம் என்பது நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே நம் முன்னோர்களின் கடினமான முயற்சியால் நிலைநாட்டப்பட்ட ஒன்று என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டும். இனி, அவர்களும் அதற்குப் பொறுப்பேற்று, இன நல்லிணக்கத்தைப் பேணிக்காக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
கல்விக்கான இரண்டாம் அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான், எண்டேவர் தொடக்கப் பள்ளியிலும், துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங், ஜூரோங்வில் உயர்நிலைப் பள்ளியிலும், மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங், ஜுன்யுவான் தொடக்கப் பள்ளியிலும் நடந்த இன நல்லிணக்க நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.