கேமி புயலால் பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு சிங்கப்பூரிலிருந்து செல்லவிருந்த விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன அல்லது மறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
பிலிப்பீன்ஸ், தைவான் ஆகிய நாடுகளை புதன்கிழமை (ஜூலை 24) அன்று புரட்டிப் போட்ட கேமி என்ற பலத்த புயல் மழை அடுத்து தென்கிழக்கு சீனாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சிங்கப்பூரிலிருந்து செல்லவிருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது மறுதேதிக்கு மாற்றிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஙகப்பூருக்கும் ஃபுசோவுக்கும் இடையே வியாழக்கிழமை (ஜூலை 25) அன்று புறப்படவிருந்த இரண்டு விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலைய இணையப்பக்கத் தகவல் கூறுகிறது.
ஃபுசோ நகரம் தென்கிழக்கு சீன மாநிலமான ஃபுஜியானின் தலைநகரமாகும். அங்கு கேமி புயல் மழை தாக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் உயர்நிலை வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கேமி புயலால் வியாழக்கிழமை அன்று சீனாவின் பல பகுதிகளில் கனமழை பொழியும் என்றும் இது ஜூலை 31ஆம் தேதிவரை நீடிக்கக் கூடும் என்றும் சீன நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது.
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் வீதிகள் வெள்ள நீரில் மூழ்கின. வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் மார்பளவு வெள்ளம் தேங்கியது.
அதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கிடையே, சூறாவளி மற்றும் வெள்ளத்தில் 20 பேர் உயிரிழந்ததாக காவல்துறை கூறியது.