பெற்ற மகனைக் கொடுமைப்படுத்திய தாய்க்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) 13 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரியிடம் தவறான தகவல்களைக் கொடுத்த குற்றமும் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டது.
அவர் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாக்க, அந்த 33 வயது மாதின் பெயர் வெளியிடப்படவில்லை.
கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் அந்தக் குற்றச்செயல் நடந்தபோது பாதிக்கப்பட்ட சிறுவன், தமது தாயார், மாற்றாந் தந்தை வழி உடன்பிறப்புகள், தாயாரின் அப்போதைய காதலர் ஆகியோருடன் வசித்து வந்தார். காதலர் பாதிக்கப்பட்டவரின் தந்தையா என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.
அந்த ஆண்டு மே 11ஆம் தேதி, நீதிமன்ற ஆவணங்களில் வெளியிடப்படாத செயல்களுக்காக, சிறுவனைத் தண்டிக்க அந்தப் பெண் முடிவு செய்தார்.
அச்சிறுவனை கையைத் தரையில் வைத்தபடி நிற்குமாறு கட்டளையிட்டார். சிறுவனால் நீண்ட நேரம் அப்படி நிற்க முடியவில்லை. பிறகு அவர் சிறுவனை எட்டி உதைத்து, அறைந்ததுடன் இடைவாரால் (பெல்ட்) அடித்துள்ளார்.
“பாதிக்கப்பட்டவர் வேதனையில் அழுதார். நிறுத்துமாறு கெஞ்சினார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவனின் மன்றாடலைப் புறக்கணித்தார்,” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் டேவிட் மேனன் நீதிமன்றத்தில் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“குற்றம் சாட்டப்பட்டவர், இடைவாரின் வார் பகுதி, அதன் தலைப்பகுதி (பக்கிள்) இரண்டையும் பயன்படுத்தி 100 முறைக்கு மேல் சிறுவனை அடித்தார்.”
மகனின் உடல், முகம் முழுவதும் தாக்கினார். மாதின் செயல்கள் சிசிடிவி கேமராவில் பதிவாகின.
மறுநாள், ஜூரோங்கில் உள்ள நன்யாங் அக்கம்பக்கக் காவல் நிலையத்துக்கு சிறுவனை அழைத்துச் சென்ற மாது, தனது அப்போதைய காதலர் குழந்தையைத் தாக்கியதாகக் கூறி பொய்யான புகாரளித்தார்.
கடந்த 2020, மே மாதம் 13ஆம் தேதி சிறுவனைப் பரிசோதித்த கேகே மகளிர், சிறார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர், அவனுக்கு 50க்கும் மேற்பட்ட காயங்களும் சிராய்ப்புகளும் இருந்ததைக் கண்டறிந்தார்.
தாயின் குற்றங்கள் எவ்வாறு வெளிச்சத்திற்கு வந்தன என்பதை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.
ஆகஸ்ட் 2ஆம் தேதி மாதுக்கு $15,000 பிணை நிர்ணயிக்கப்பட்டது. தண்டனையைத் தொடங்க செப்டம்பர் 2ஆம் தேதி அன்று அரசு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டது.
அண்மைய மாதங்களில் சிறுவர் துன்புறுத்தல் சம்பவங்கள் பல அதிகம் வெளிவருகின்றன.
ஒரு சம்பவத்தில், தனது இரண்டு குழந்தைகளைத் துன்புறுத்தியதற்காக 44 வயது ஆடவருக்கு ஏப்ரல் மாதம் 34½ ஆண்டு சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. துன்புறுத்தப்பட்ட அவரது ஐந்து வயது மகள் உயிரிழந்தார்.
உடல்நிலை காரணமாக அவர் பிரம்படிக்கு நிரந்தரமாக தகுதியற்றவர் என்று மே 13ஆம் தேதி அன்று மருத்துவ ரீதியாக சான்றளிக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள், ஜூலை 9ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அவர் பிரம்படிக்குப் பதிலாக மேலும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். மற்றொரு வழக்கில், 2022ஆம் ஆண்டு தனது 11 வயது மகனை பலமுறை துன்புறுத்தியதால் 53 வயது ஆடவருக்கு ஜூன் 14ஆம் தேதி அன்று ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

