‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் சேர்ந்தனர்

2 mins read
49561224-d661-47b9-a27e-d7b79a40794f
மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டம் தொடங்கி ஓராண்டில் 960,000க்கும் அதிகமானோர் சேர்ந்துள்ளனர். - கோப்புப் படம்: சாவ்பாவ்

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி (ஹெல்தியர் எஸ்ஜி) திட்டம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே 960,000க்கும் அதிகமானோர் அதில் சேர்ந்துகொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தகவல், திட்டம் நம்பிக்கை தரும் வகையில் உருவெடுத்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக அமைச்சு குறிப்பிட்டது.

கடந்த மே மாதம் வரை மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தில் சேர்ந்தோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போது பதிவாகியுள்ள எண்ணிக்கை சுமார் 10 விழுக்காடு அதிகமாகும். அந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 870,000 பேர் திட்டத்தில் சேர்ந்துகொண்டதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்திருந்தார்.

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி தொடங்கியதிலிருந்து அதில் சேர்ந்துகொள்ளுமாறு 40 வயது அல்லது அதையும் தாண்டிய 2.4 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது திட்டத்தில் சேர்ந்திருப்போரில் ஏறத்தாழ 580,000 பேர் 60 வயது அல்லது அதையும் தாண்டியவர்கள்.

சுமார் 380,000 பேர் 40லிருந்து 59வயதுக்கு உட்பட்டவர்கள். இத்தகவல்களை சுகாதார அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தின்கீழ், மேம்பட்ட உடல்நலனுடன் இருக்கும் நோக்கில் மக்கள், தங்கள் குடும்ப மருத்துவர் ஒருவரின் மருந்தகத்துடன் பதிவுசெய்துகொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் இலவச மருத்துவ சோதனைகளை மேற்கொள்வது, தேசிய அளவில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது போன்ற சேவைகளை மக்கள் பெறுவர்.

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட பொது மருத்துவர்கள் பங்கேற்பதாக சுகாதார அமைச்சு கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது.

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜியில் சேர்வோர் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சுகாதார வழிகாட்டித் திட்டம் (ஹெல்த் பிளான்) ஒன்று வரையப்படும். அவரவர் சுகாதாரம் சார்ந்த தங்களின் இலக்குகளை அடைவதற்கு அது உதவும்.

தனிப்பட்ட சுகாதார வழிகாட்டித் திட்டத்தின்கீழ் கூடுதலானோர் மருத்துவர்களிடம் தேவையான ஆலோசனை பெற்றுவிட்டதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. இதன் தொடர்பிலான புள்ளி விவரங்களை அமைச்சு வழங்கவில்லை.

குறிப்புச் சொற்கள்