தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்து மாணவர்களின் கற்றல் சாதனங்களிலிருந்தும் ‘மொபைல் கார்டியன்’ செயலி நீக்கப்படும்

2 mins read
இணையப் பாதுகாப்பு மீறல் சம்பவத்தைத் தொடர்ந்து கல்வி அமைச்சு நடவடிக்கை
58881832-8485-4014-a2fb-b4f1ec03d254
ஆகஸ்ட் 4ஆம் தேதி நடந்த பாதுகாப்பு மீறல் சம்பவத்துக்கும் மாணவர்கள் ஜூலை மாத இறுதியில் எதிர்கொண்ட தொழில்நுட்பச் சிக்கலுக்கும் தொடர்பு இல்லை என்று கல்வி அமைச்சு கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் மாணவர்கள் அனைவரின் தனிப்பட்ட கற்றல் சாதனங்களிலிருந்தும் ‘மொபைல் கார்டியன்’ செயலி நீக்கப்படும் என்று கல்வி அமைச்சு ஆகஸ்ட் 5ஆம் தேதி தெரிவித்துள்ளது.

உலகளாவிய நிலையில் ஏற்பட்ட இணையப் பாதுகாப்பு மீறல் சம்பவத்தால் சிங்கப்பூரின் 26 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 13,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து அமைச்சு இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர்களின் ‘ஐபேட்’, ‘குரோம்புக்’ சாதனங்களிலிருந்து அந்தச் செயலி நீக்கப்படும் என்று அமைச்சு கூறியது.

இந்தச் சாதனங்களைப் பாதுகாப்பாக மீண்டும் வழக்கமான பயன்பாட்டுக்கு மீட்டெடுப்பது தொடர்பில் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அது சொன்னது.

‘மொபைல் கார்டியன்’ செயலி, பிள்ளைகள் சாதனத்தைப் பயன்படுத்தும் விதத்தைப் பெற்றோர் நிர்வகிக்க உதவக்கூடியது.

அதைப் பயன்படுத்தி பிள்ளைகள் திரையில் செலவிடும் நேரத்தை அவர்கள் கட்டுப்படுத்தலாம். குறிப்பிட்ட சில இணையத்தளங்களையும் செயலிகளையும் பிள்ளைகள் அணுகாமலும் தடுக்க இயலும்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி பின்னிரவில் சில பள்ளிகள் அவற்றின் மாணவர்கள் சிலரால் ‘ஐபேட்’, ‘குரோம்புக்’ சாதனங்களில் சேமித்திருந்த தகவல்களையும் சில செயலிகளையும் பயன்படுத்த இயலவில்லை என்று தெரிவித்ததாகக் கல்வி அமைச்சு கூறியது.

தனது தளத்தை ஊடுருவி உலக அளவில் இணையப் பாதுகாப்பு மீறல் சம்பவம் இடம்பெற்றதும் அதனால் சிங்கப்பூர் உட்பட உலகெங்குமுள்ள வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதும் ‘மொபைல் கார்டியன்’ நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக அமைச்சு தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் சாதனங்களில் இருந்த தகவல்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகக் கூறிய அமைச்சு, மாணவர்களின் கோப்புகள் ஊடுருவப்பட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று குறிப்பிட்டது.

“இத்தகைய சம்பவம் மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்துவது இயல்பு என்பதை அறிந்துள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு தருவதன் தொடர்பில் அமைச்சு பள்ளிகளுடன் இணைந்து செயல்படுகிறது. பள்ளிகளுக்குக் கூடுதல் தகவல் தொழில்நுட்பக் குழுக்கள் அனுப்பப்படும். கூடுதல் கற்றல் வளங்களும் வழங்கப்படும்,” என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

இவ்வேளையில், ஆகஸ்ட் 4ஆம் தேதி நடந்த பாதுகாப்பு மீறல் சம்பவத்துக்கும் மாணவர்கள் ஜூலை மாத இறுதியில் எதிர்கொண்ட தொழில்நுட்பச் சிக்கலுக்கும் தொடர்பு இல்லை என்று அது கூறியது.

குறிப்புச் சொற்கள்