காப்புறுதி, மெடிசேவ் கோரிக்கை தொகை பெற மருத்துவர்கள் இருவருக்குத் தடை

2 mins read
23412ea5-300f-4060-93b4-1233332b21ce
தடை விதிக்கப்பட்ட மருந்தகங்களில் ஒன்றான ‘மெலிசா டியோ சர்ஜரி’. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

தனியார் நிபுணத்துவ மருத்துவர்கள் அறுவர் மீது சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், தேவையில்லாத சிகிச்சைகளை மேற்கொண்டது, பெறவேண்டியதைவிட அதிகமான கோரிக்கை தொகையைப் பெற்றது, தாங்கள் மேற்கொள்ளாத சிகிச்சை முறைகளுக்குக் கோரிக்கை தொகை பெற முயற்சி செய்தது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் கட்டுப்படியாக இருக்கும் வண்ணம் சுகாதாரப் பராமரிப்புக் கட்டணங்களை வைத்திருக்க சுகாதார அமைச்சு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக தனியார் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகளை முன்னிறுத்தி உகந்த நடவடிக்கை எடுக்க வகைசெய்யும் எஸ்கலே‌ஷன் அண்ட் என்ஃபோர்ஸ்மென்ட் ஃபிரேம்வொர்க் (இஇஎஃப்) கட்டமைப்பு விதிமுறைகளின்கீழ் முதன்முறையாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தவறு இழைக்கும் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமைச்சுக்குக் கூடுதல் அதிகாரம் தரும் விதிமுறைகள்2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி நடப்புக்கு வந்தது.

பெரிய அளவில் தவறு இழைத்த இரு மருத்துவர்களுக்கும் அவர்களின் மருந்தகங்களுக்கும் மெடிசேவ், மெடி‌‌ஷீல்ட் லைஃப் ஆகியவற்றிலிருந்து கோரிக்கை தொகை பெறத் தடை விதிக்கப்படடுள்ளது. திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) நடப்புக்கு வந்த அந்தத் தடை, ஆறு மாதங்களுக்கு நீடிக்கும்.

கோரிக்கை தொகையைப் பெறும் உரிமையைப் பறிப்பதுதான் சுகாதார அமைச்சு, ஒரு மருத்துவருக்கு விதிக்கக்கூடிய ஆகக் கடுமையான தண்டனையாகும்.

சம்பந்தப்பட்ட மற்ற மருத்துவர்கள் நால்வர், தண்டனையாக, சுகாதார அமைச்சு விதிமுறைகளை விவரிக்கும் பயிற்சித் திட்டங்களில் நேரடியாகப் பங்குபெறவேண்டும்.

மெடிசேவ், மெடி‌ஷீல்ட் லைஃப் கோரிக்கை தொகையைப் பெறத் தடை விதிக்கப்பட்ட மருத்துவர்கள், நொவீனாவில் உள்ள மவுண்ட் எலிசபெத் நிபுணத்துவ மருத்துவ நிலையத்தில் இருக்கும் ‘மெலிசா டியோ சர்ஜரி’ மருந்தகத்தைச் சேர்ந்த மருத்துவர் மெலிசா டியோ சிங் சிங், ராயல் ஸ்குவேர்@நொவீனாவில் உள்ள ‘டாக்டர் நடா‌ஷா லிம் ஐ சென்டர்’ மருந்தகத்தின் கண் மருத்துவர் நடா‌ஷா லிம் ஆகியோர் ஆவர்.

நடவடிக்கை எடுக்கப்பட்ட மற்ற நான்கு மருத்துவர்களின் பெயர்களை சுகாதார அமைச்சு வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்