வீவக புளோக்கில் மின்சைக்கிள் தொடர்புடைய தீச்சம்பவம்: பலர் வெளியேற்றம்

1 mins read
e49527f0-c24b-48ff-9337-0cb044c0f3f9
சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: டெஸ்மண்ட் லீ / ஃபேஸ்புக்

கிளமெண்டி வட்டாரத்தில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து அதில் வசிக்கும் சுமார் 35 குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவம் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 8) கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 2ல் உள்ள வீவக புளோக் 706ல் நிகழ்ந்தது. சம்பவம் குறித்து வியாழக்கிழமை மாலை 7.45 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

மின்சைக்கிள் ஒன்றின் மின்கலன் பகுதியிலிருந்து தீ மூண்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 9) கூறியது. இது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அது பதிலளித்தது.

புளோக்கின் 12வது தளத்தில் இருக்கும் வீட்டின் அறையில் இருந்த பொருள்களிலிருந்து தீ மூண்டது. தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் குழாய்களைக் கொண்டு தீயை அணைத்தனர்.

சம்பவத்தில் யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை என்று வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டெஸ்மண்ட் லீ, வெள்ளிக்கிழமையன்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

தீ மூண்ட வீட்டின் அண்டை வீட்டில் வசிக்கும் ஒருவர் புகையை நுகர்ந்ததைத் தாங்கள் அறிந்ததாக குடிமைத் தற்காப்புப் படை சொன்னது. எனினும், அந்நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட இணங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்