செம்பவாங் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடத்தின் தரைத்தளத்தில் தீ மூண்டதை அடுத்து, 35 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இத்தீச்சம்பவம் கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்த மூன்று தனிநபர் நடமாட்டச் சாதனங்களுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
அட்மிரல்ட்டி லிங்க் புளோக் 482ல் நிகழ்ந்த தீச்சம்பவம் குறித்து ஆகஸ்ட் 14ஆம் தேதி பின்னிரவு 2.10 மணி அளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தரைத்தளத்தில் மூண்ட தீயைத் தீயணைப்பாளர்கள் அணைத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.
தீ அணைக்கப்பட்டதும் தரைத்தளத்தில் உள்ள மிதிவண்டி நிறுத்திவைக்கும் இடத்தில் மூன்று தனிநபர் நடமாட்டச் சாதனங்கள், பல மிதிவண்டிகள், அருகில் உள்ள உட்கூரை, சுவர் ஆகியவை கருகிய நிலையில் இருந்ததைக் காட்டும் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.