தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலை இழந்தோருக்கு அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு $6,000 வரை நிதியுதவி

2 mins read
03dd8fc2-475a-4755-9af6-baa407d93bd2
தேசிய தினப் பேரணி உரையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலையை இழந்தோருக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் அவர்களுக்கு 6,000 வெள்ளி வரையிலான தற்காலிக நிதியுதவித் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

வேலை தேடுவோருக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆதரவுத் திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஆறு மாதங்கள் வரை அந்த நிதியுதவியைப் பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் ஊழியர்கள் தாங்களும் பங்காற்றும் வகையில் தொழில்துறைப் பயிற்சிகளை மேற்கொள்வது, வேலை தேடித் தரும் சேவைகளை நாடுவது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 18) ஆற்றிய தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

“மேலும் நல்ல வேலையைத் தேடிக்கொள்ள உங்களுக்கென இத்தகைய முயற்சிகளை நீங்களும் மேற்கொள்வது அவசியம்,” என்றார் திரு வோங்.

“பொறுப்புகள், கடமைகள் குறித்து அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான புதுப்பிக்கப்பட்ட சமூக இணக்கத்தின் சாரம் இது. நாங்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டி ஆதரவாக நிற்போம். அதேவேளை, நீங்களும் உங்கள் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்று உங்களை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டம் குறைந்த, நடுத்தர வருமான ஊழியர்கள் மீது கவனம் செலுத்தும். ஆட்குறைப்பு செய்யப்பட்டோர், தங்கள் நிறுவனம் செயல்பட முடியாததால் வேலையை இழந்தோர் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

வேலை தேடுவோருக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆதரவுத் திட்டம் குறித்த விவரங்களை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெளியிடுவார் என்று திரு வோங் தெரிவித்தார். டாக்டர் டான் எப்போது விவரங்களை வெளியிடுவார் என்பது குறித்து அவர் கூறவில்லை.

சில நாடுகளில் வேலையில்லாதோருக்கான காப்புறுதித் திட்டம் நடப்பில் இருக்கிறது. அதைவிடத் தரமான மாற்று ஏற்பாட்டைச் செய்ய அரசாங்கம் விரும்புவதாகவும் திரு வோங் சொன்னார்.

வேலையில்லாதோருக்கான காப்புறுதித் திட்டங்களைப் பொறுத்தவரை அரசாங்கம் என்றுமே கவனமாக இருந்துள்ளது; அவை எப்போதும் பலனளித்துள்ளன என்று சொல்லிவிட முடியாது என்பதே அதற்குக் காரணம் என்றார் திரு வோங்.

வேலையில்லாதோருக்கான காப்புறுதித் திட்டத்தின் மூலம் நன்கு பலனடைவோர், வேலை பார்ப்பதைவிட வேலைக்குப் போகாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கக்கூடும் என்று அவர் விவரித்தார்.

அதேவேளை, வேலையை இழப்பது என்பது பெரும் பின்னடைவுதான் என்றும் அது ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் நிலையற்ற சூழலுக்குத் தள்ளக்கூடும் என்றும் திரு வோங் சுட்டினார். அந்த வகையில் பாதிக்கப்பட்டோரின் சுமை குறைக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்