அன்றாடம் செய்திகள் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்த 74 வயது திரு முத்துசாமி சுப்பையாவிற்கு, ஏனோ சில நாள்களாக அப்பழக்கம் மறந்துபோனது. செய்திகளை வழக்கம்போல் கேட்க நினைவூட்டல் வைத்தாலும் அவரால் அதனை நினைவுகூர இயலவில்லை.
சிலநேரம் வெளியே சென்றுவிட்டால், வீட்டுக்குத் திரும்பும் வழி, பேருந்து எண் விவரம் ஆகியவையும் இவருக்கு மறந்துபோய் விடுகிறது. அப்போது, பேருந்து நிறுத்தத்தில் உள்ளவர்களிடம் உதவிகேட்டு வீடு வந்துசேர்கிறார் இவர்.
திரு முத்துசாமியின் மனைவி திருவாட்டி ராமக்கிரிஷா கீதாவிற்கு 75 வயது. அவரும் நெடுங்காலமாகச் செய்துவந்த சமையலைச் சில நேரங்களில் மறக்க நேரிட்டது. வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவதிலும் தடுமாற்றம். இவர்களுக்கு ஏற்பட்டிருப்பது ‘டிமென்ஷியா’ எனப்படும் முதுமைக்கால மறதிநோய்.
முதுமைக்கால மறதிநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர்களின் நேச மொழி சிரிப்பு மட்டுமே. நினைவுகள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை என்றாலும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பு இவ்விணையர்க்குப் பேருதவியாகத் திகழ்கிறது.
“தொடக்கத்தில் இருவரின் உடல்நலத்தையும் ஒருசேரப் பார்த்துக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. அவ்வப்போது சலிப்பும் ஏற்படும். ஆனால், இப்போது அப்படியில்லை.
“மணவாழ்வின் தொடக்க ஆண்டுகளில் மனைவி என்னை அவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொண்டார். தற்போது என் மனைவிக்குப் பல விஷயங்கள் நினைவில் இல்லாவிட்டாலும் புன்னகைப்பதை மட்டும் அவர் மறக்கவில்லை. இப்போது நான் என்னால் இயன்றவரையில் வீட்டு வேலை, அவரைக் கவனித்துக்கொள்வது என மனைவிக்கு உதவியாகச் செயல்படுகிறேன். இது வாழ்நாளைச் சிரமமின்றி கடத்த உதவுகிறது,” என்று தமிழ் முரசிடம் கூறினார் திரு முத்துசாமி.
தொடக்கத்தில் இந்நோயின் பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரிந்ததும் அதுகுறித்துக் கவலைப்படாமல் உடனடியாக மருத்துவ உதவியை இவர் நாடினார்.
தனது ‘டிமென்ஷியா’ பகல் நேரப் பராமரிப்புச் சேவை நிலையத்தில் திருவாட்டி கீதா, 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலும் திரு முத்து ஜூலை மாதத்திலும் சேர்ந்ததாக ‘ஏவா’ (AWWA) அமைப்பு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மூத்தோரின் நினைவாற்றல் முடங்காமல் இருக்க, அவர்கள் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
டிமென்ஷியா நலன் சார்ந்த நட்புமிக்க சமூகத்தை உருவாக்குவதில் ‘ஏவா’ கவனம் செலுத்துகிறது என்று கூறினார் அந்நிலையத்தின் மேலாளர் ஸ்டெல்லா புவா.
“நிலையத்தின் இந்த அணுகுமுறை டிமென்ஷியா பாதிப்புடன் இருப்போர் கண்ணியத்துடன் மூப்படைவதை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் அவர்களின் பராமரிப்பாளர்களுக்குத் தேவையான ஓய்வையும் அளிக்கிறது,” என்று திருவாட்டி ஸ்டெல்லா சொன்னார்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் தேதி உலக அல்சைமர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘டிமென்ஷியா’ எனும் ஒற்றைச்சொல் ஏதோ ஒரு வகை பாதிப்பை மட்டும் குறிப்பிடுவதில்லை. மறதி தொடர்புடைய பலவகைச் சுகாதார இடர்கள் இவற்றுள் அடங்கும்.
இத்தகைய மறதிநோய்களுள் பொதுவான வகை ‘அல்சைமர்’ என்று அறியப்படுகிறது. 60 வயதிற்கும் மேற்பட்ட மூத்தோரில் பத்துப் பேரில் ஒருவருக்கு ‘டிமென்ஷியா’ பாதிப்பு உள்ளது.
சிந்திப்பது, புதிய தகவல்களை நினைவில் வைத்துக்கொள்வது, பழையவற்றை நினைவுகூர்வது, புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயல்திறனை இவ்வகை பாதிப்புக்கு ஆளாவோர் இழக்க நேரிடுகிறது.
அல்சைமர் தொடர்பாக லண்டன் பொருளியல், அரசியல், அறிவியல் பள்ளி ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவு, முதுமையடைதலின் ஓர் இயல்பான பகுதி ‘டிமென்ஷியா’ என்று 65 விழுக்காட்டுச் சுகாதார வல்லுநர்கள் கருதுவதாகத் தெரிவித்துள்ளது. பொதுமக்களில் 80 விழுக்காட்டினரும் முதுமையில் மறதி இயல்பானது என்றே எண்ணம் கொண்டுள்ளதாகவும் ஆய்வு சுட்டியது.
மனநலக் கழகம் மேற்கொண்ட ஆய்வின்மூலம், கடந்த பத்தாண்டுகளில் சிங்கப்பூர் மூத்தோரிடையே ‘டிமென்ஷியா’ பாதிப்பு ஏற்படுவது குறைந்துள்ளதாகவும், அவர்களுக்கு அந்நோய் தொடர்பில் வழங்கப்படும் சிகிச்சையில் காணப்பட்ட இடைவெளிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.