பள்ளிகளில் காணப்படும் துன்புறுத்தல், தவறான நடத்தைகளைக் கையாள, 2027க்குள் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான, மேலும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளைக் கல்வி அமைச்சு கட்டாயமாக்கவுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பினர் கிட்டத்தட்ட 2,000 பேரிடம் நடத்தப்பட்ட விரிவான மறுஆய்வுக்குப் பிறகு, அமைச்சு அந்த முடிவை எடுத்துள்ளது.
தெக் கீ தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை (ஏப்ரல் 15) ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளியின் பெற்றோர் ஆதரவுக் குழுவினர் ஆகியோரைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசியபோது கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இதனை அறிவித்தார்.
ஒருமுறை நடக்கும் சம்பவங்கள் ‘புண்படுத்தும் நடத்தை’ எனவும் உள்நோக்கத்துடன் தொடர்ச்சியாக நடப்பவை ‘துன்புறுத்தல்’ எனவும் வகைப்படுத்தப்படும்.
“துன்புறுத்தல் சம்பவங்கள், புண்படுத்தும் நடத்தை ஆகியவற்றைச் சமாளிக்கப் பல்வேறு பள்ளிகள் பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், இவற்றைக் கையாளும் விதத்தில் வேறுபாடுகள் இருப்பதைக் கண்டோம்.
“தெளிவான நெறிமுறைகளையும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளையும் வழங்க பள்ளிகளுடன் இணைந்து செயல்படுவோம். இதன்மூலம், அனைத்து நடவடிக்கைகளிலும் சீரான தன்மையும் ஒருமித்த அணுகுமுறையும் உறுதியான நிலைப்பாடும் உறுதிசெய்யப்படும்,” என்று திரு லீ கூறினார்.
கடந்த 2021-2025 காலகட்டத்தில் தொடக்கப்பள்ளிகளில் 1,000க்கு 2லிருந்து 3 ஆகவும், உயர்நிலைப் பள்ளிகளில் 6லிருந்து 8 ஆகவும் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கல்வி அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.
கல்வித்துறை நிபுணர்கள், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்முதல் நடத்தப்பட்ட அந்த மறுஆய்வின் அடிப்படையில், நான்கு முக்கியத் துறைகளின்கீழ் ஒன்பது பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில், முதல் ஐந்து பரிந்துரைகள் விழுமியக் கல்வியை மேம்படுத்துவதிலும் பள்ளி கலாசாரத்தையும் நடைமுறைகளையும் வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன.
மாணவர்களுக்குப் பொறுப்புகள் கொடுப்பதன் வழியாகவும் நிஜ வாழ்க்கை உதாரணங்கள் வாயிலாகவும் நற்குணம், குடியுரிமைக் கல்வி (CCE) வலுவடைந்து, விழுமியக் கல்வி மேம்படுத்தப்படும். அது, மாணவர்களின் சமூக, உணர்வுபூர்வமான கற்றல், பரிவு, நேர்மையான நடத்தை ஆகியவற்றை வலுப்படுத்த உதவும்.
மேலும், கனிவு, மரியாதை ஆகியவற்றை வலியுறுத்தும் கலாசாரத்தை ஆழப்படுத்துதல், இணையம் தொடர்பான துன்புறுத்தல் சம்பவங்களைச் சிறப்பாகக் கையாளுதல் மூலம் பள்ளி நடைமுறைகள் மேம்படுத்தப்படும்.
கூட்டுப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்குடன், புதிய இணையப் புகாரளிக்கும் தளமும் அறிமுகம் காணவுள்ளது.
“2027ஆம் ஆண்டு முதல், துன்புறுத்தல் சம்பவங்கள், புண்படுத்தும் நடத்தை முதலியவை குறித்துப் புகார் அளிக்க ஓர் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்படும். இது, நமது மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவியைப் பெற ஒரு கூடுதல் வழியாக இருக்கும்,” என்று அமைச்சர் லீ கூறினார்.
மாணவர்கள் செய்யும் கடுமையான குற்றங்களுக்குத் தரப்படுத்தப்பட்ட, கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் 2026 முதல் படிப்படியாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு, அடுத்த ஆண்டுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்படும்.
முதல்முறை குற்றம் செய்வோர் 1 முதல் 3 நாள்கள் வரை தடுத்துவைக்கப்படலாம் அல்லது இடைநீக்கம் செய்யப்படலாம். அதோடு, அவர்களின் நன்னடத்தைத் தரநிலையும் குறைக்கப்படலாம். மூத்த ஆண் மாணவர்களுக்கு ஒரு பிரம்படி கொடுக்கப்படலாம். தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு 3 பிரம்படிகள்வரை கொடுக்கப்படும்.
பள்ளிகள் தங்கள் தனிப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், கூடுதல் பள்ளிசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரத்தைப் பெறும். மேலும், பிரம்படி வழங்குவதற்கு முன், மாணவர்களின் வயது, முதிர்ச்சி நிலை, சிறப்புக் கல்வித் தேவைகள், மனநலப் பிரச்சினைகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.

