சிங்கப்பூரில் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய மக்கள்தொகை சுகாதாரக் கருத்தாய்வும் தேசிய ஊட்டச்சத்துக் கருத்தாய்வும் கவலையளிக்கும் முடிவுகளை வெளியிட்டுள்ளன. சர்க்கரை உட்கொள்ளும் அளவு குறைந்துள்ளதைப் பல செய்திகள் முன்னிலைப்படுத்தின. ஆயினும் பொதுவாக ஒருவர் உட்கொள்ளும் கலோரி, கொழுப்பு, உப்பு ஆகியவற்றின் அளவு கூடியிருப்பது மிகவும் கவலைதரக்கூடிய அம்சம் என்று கூறப்படுகிறது.
ஆரோக்கியமாக உண்ணுமாறு விழிப்புணர்வு இயக்கங்களும் அரசாங்கத்தின் ஆலோசனைகளும் பல ஆண்டுகளாக வழங்கப்படுகின்றன. ஆயினும் பொதுவாகப் பலருக்கும் சுயக்கட்டுப்பாடு இல்லை என்பதையும் அதிக மனவுளைச்சலுக்கு இடையே ஒவ்வொரு வாய்ப்பிலும் சுவையான உணவைத் தேடுவதையும் இந்தக் கருத்தாய்வு நிரூபிப்பதாகச் சிலர் கூறக்கூடும்.
இருப்பினும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொதுச் சுகாதாரத் துறை வல்லுநர்கள் சிலர் தெரிவித்தனர். இது மிக அடிப்படையான உண்மையைக் புறக்கணிப்பதாக அவர்கள் கூறினர். உணவுத் தெரிவுகள் தனித்து எடுக்கப்படுவதில்லை என்றும் அவை விலை, வசதிகள், சலுகை, உணர்வு முதலியவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
சிங்கப்பூர் இதை மாற்ற விரும்பினால், ஆரோக்கியமான உணவு உட்கொள்வதைத் தனிமனிதரின் ஒழுங்குமுறையுடன் தொடர்புபடுத்தக்கூடாது; மாறாக, ஆரோக்கியமான தெரிவுகளை மலிவானதாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் சமூகத்தில் இயல்பான ஒன்றாகவும் மாற்ற வேண்டும் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.
ஆரோக்கியமான உணவும் உணவங்காடி நிலையமும்
பத்தில் ஏழு சிங்கப்பூரர்கள் அன்றாடம் வெளியில் சாப்பிடுகிறார்கள். இது புதிதாகத் தயாரிக்கப்படும் உணவுவகைகளை நோய்த் தடுப்புச் சுகாதாரத்திற்கான முக்கியப் போர்க்களமாக உருமாற்றுகிறது. ஆனால் உணவுக் கடைக்காரர்கள் சரியானவற்றைச் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்பதோடு நியாயமற்றதும்கூட.
உணவு, பானக் கடைகள் வாடிக்கையாளர்களை ஈர்க்கப் போட்டியிடுகின்றன. அவை சுவைமிகு உணவுவகைகளைத் தயாரிக்கின்றன. புலன்களின் ஈர்ப்பை அதிகரிக்கவும் மூளையின் மகிழ்ச்சிப் பகுதியைத் தூண்டிவிடவும் கொழுப்பு, உப்பு, சர்க்கரை முதலியவை திட்டமிட்டு இணைக்கப்படுகின்றன. இதற்கு அடிமையாகாமல் இருப்பது சிரமம். அதோடு, இத்தகைய உணவுவகைகள் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கும்போது, ஆரோக்கியமான தெரிவுகள் கடுமையான போராட்டத்தைச் சந்திக்கின்றன.
சில்லறை உணவு விற்பனையாளர்களின் இயல்பான வணிகக் காரணங்களைத் தணிக்க, முதலில் முக்கியமாகப் பொருளியலைச் சரிசெய்ய வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவின் விலை அதிகம் இருந்தால், இயற்கையாகவே மக்களின் கவனம் மலிவான, அதிக கலோரி கொண்ட உணவுவகைகளை நோக்கியே திரும்பும்.
புத்தாக்கமான மாற்று வழிகளில் கவனம் தேவை
எதிர்காலத்தில் பக்கவாதம், மாரடைப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளைக் குறைக்க, உயர் ரத்த அழுத்தம், அதிக ரத்தக் கொழுப்பு, அதிக ரத்தச் சர்க்கரை ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் இன்று மருந்தை மானிய விலையில் வழங்குகிறோம்.
அப்படியிருக்கும்போது ஆரோக்கியமான உணவுவகைகளுக்கு ஏன் மானியம் வழங்கக்கூடாது என்ற கேள்வி எழுகிறது.
சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புக் கொள்கை மோசமான ஆரோக்கியத்தின் பிந்திய விளைவுகளுக்குத் தொடர்ந்து தீர்வுகண்டு வருகிறது. இருந்தாலும் உணவுவகைகளுக்கு மானியம் வழங்குவது ‘ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டத்தில் பொதிந்துள்ள நோய்த் தடுப்புச் சுகாதார அணுகுமுறைக்கு ஏற்புடையதாக இருக்கும்.
சுவை என்பது கொழுப்பு, உப்பு, சர்க்கரையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதில்லை; அதை ஆரோக்கியமான கொழுப்பு, நறுமணப் பொருள்கள், நொதித்தல், சமையல் நுட்பங்கள் மூலமாகவும் பெற முடியும். உணவின் ஊட்டச்சத்துத் தரத்தை உயர்த்தும் அதே வேளையில், உண்ணும் மகிழ்ச்சியையும் தக்கவைத்துக்கொள்ளும் சமையல் குறிப்புகளையும் தயாரிப்பு முறைகளையும் உருவாக்குவதே தற்போதுள்ள சவால்.
இதற்கு முதலீடு தேவை. புத்தாக்க, நிறுவன மானியங்கள், புதிய மூலப்பொருள்களையும் சமையல் முறைகளையும் உணவு நிறுவனங்கள் சோதித்துப் பார்க்க உதவும். இம்முயற்சிகள் வெற்றியடைந்து தேவை அதிகரித்தால், செலவைக் குறைக்க முடியும். பொதுத் துறை நிறுவனங்களும் அரசாங்கம் சார்ந்த அமைப்புகளும் உணவு விநியோகம், சிற்றுண்டி அறை ஏற்பாடுகளில் இவற்றுக்கு முன்னுரிமை அளித்து, இத்தகைய உணவுவகைகளுக்கான சந்தையை ஊக்குவிக்க உதவலாம் என்கின்றனர் பொதுச் சுகாதார வல்லுநர்கள்.
