உடல்நலப் பிரச்சினை காரணமாக பள்ளி ஆண்டின் கிட்டத்தட்டப் பாதிப் பகுதி மருத்துவ விடுப்பில் இருந்த மாணவர் லெனர்ட் டோ அனைத்துலக வேதியல் ஒலிம்பியட் (ஐசிஎச்ஓ) போட்டியில் சிங்கப்பூரின் ஒரே தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.
ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவரான இவர், 57வது முறையாக நடைபெற்ற அனைத்துலக வேதியல் போட்டியில் தங்கம் வென்ற 40 பேரில் ஒருவராவார். அப்போட்டி இம்மாதம் ஐந்திலிருந்து 14ஆம் தேதி வரை நடைபெற்றது.
17 வயது லெனர்ட் டோ, 90 நாடுகளைச் சேர்ந்த 354 போட்டியாளர்களில் 19வது இடத்தைப் பிடித்தார். மோசமான மைக்ரெயின் (migraine) எனப்படும் தலைவலிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டபோதும் வாகை சூடினார்.
ராஃபிள்ஸ் கழகத்தின் டேமியன் லாய், ஹுவா சோங் கழகத்தின் இயோ துன் செங், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கணித, அறிவியல் உயர்நிலைப் பள்ளியின் (NUS High School of Mathematics and Science) ஜோஷ் சுங் ஆகியோரும் அனைத்துலக வேதியல் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தனர்.

